சென்னை: டிஎன்பிஎஸ்சி போலி பணி நியமன ஆணை தயாரித்த வழக்கில் மேலும் ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராமாபுரத்தை சேர்ந்த பத்மாவதி, செம்பியத்தை சேர்ந்த சஹீரா ஆகிய இருவரும் போலி பணி நியமன ஆணை மூலம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை அணுகியதன் மூலம் மோசடி நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலிடம் புகார் ஒன்றைஅளித்தார். இந்த புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவில் உள்ள மரபு சாரா குற்றப் பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
விசாரணை செய்ததில் புளியந்தோப்பை சேர்ந்த நாகேந்திர ராவ், தண்டையார்பேட்டையை சேர்ந்த ஞானசேகர் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தொழில் துறையில் உதவியாளராக பணிபுரியும் ஞானசேகர், நாகேந்திர ராவுடன் கூட்டு சேர்ந்து, க்ரூப் 2 பணிக்கான போலி பணி நியமன ஆணையை தயாரித்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
புகார்தாரரான பத்மாவதியின் கணவர் ரமணனுக்கு, அரசு ஊழியரான ஞானசேகரன் பழக்கம் ஆகியுள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி ஆறு லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். அவர் கொடுத்த போலி பணி நியமன ஆணையை வைத்து பணிக்கு சேர முயன்றபோதுதான் பத்மாவதி ஏமாற்றப்பட்டதை அறிந்தார். ஞானசேகரனின் செல்போன் எண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்தபோது சினிமா நடனமாடும் சுமித்ரா என்ற பெண்ணோடு அடிக்கடி பேசி வந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சினிமா டான்ஸர் சுமித்ராவை வைத்தே ஞானசேகரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோன்று நாகேந்திர ராவ் இருக்கும் இடத்தை அறிந்த போலீசார், மற்றொரு வகையில் நாடகமாடி கைது செய்தனர். புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்த நாகேந்திர ராவ் திடீரென புரசைவாக்கத்தில் வீடு மாறியதாக போலீசாருக்கு தெரியவந்தது. செல்போன் எண்ணை வைத்து தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார், க்ரூப் 2 பணியில் வேலைக்கு சேர விருப்பமுள்ளவர்கள் என 2 நபர்களை நாகேந்திர ராவை தொடர்புகொள்ள வைத்தனர். இதை நம்பி புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் வந்த நாகேந்திர ராவை போலீசார் கைது செய்தனர்.
செம்பியத்தை சேர்ந்த சஹீராவிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நாகேந்திர ராவ் மோசடி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதே போன்று ராமநாதபுரத்தில் ஒருவருக்கு வேலைவாங்கி தருவதாகக் கூறி 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.
இதுவரை 50 பேரிடம் இதுபோன்று போலி பணி நியமன ஆணை மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததை விசாரணையில் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் பணி நியமன ஆணைக்காக அதிகபட்சமாக 6 லட்ச ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். சுமார் 3 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு இருவரையும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரையும் 3 நாள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ததில், இவர்களுடன் இந்த மோசடியில் ஈடுபட்ட ரமணி என்பவரையும் கைது செய்துள்ளனர். போலி நியமன ஆணை தயாரிப்பதற்கு ரமணி உதவியதாக கைதான 2 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை பிடித்து விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.