அடிப்படை ஆரோக்கிய கல்வியை போதித்து அதனை பின்பற்றுவதன் மூலம் கரோனா பரவலை பல்வேறு நாடுகள் கட்டுப்படுத்தியுள்ள நிலையில், பொது இடங்களில் புகைப்பிடிக்க எச்சில் துப்ப, சிறுநீர் கழிக்க மத்திய மாநில அரசுகள் தடை விதித்து சட்டம் இயற்றியுள்ளது.
இருந்த போதிலும், அவை முறையாக அமல்படுத்தப்படுத்த படுவதில்லை. அவற்றை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னையை சேர்ந்த வழக்குரைஞர் ராஜ்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், சாலையோரங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கவும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் போதிய கழிப்பிட வசதி உள்ளதா? என்பதை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கழிவுகள் அபாயம் இன்றி முறையாக அப்புறப்படுத்தப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் சாலையோரம் வசிப்பவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அழைத்துச் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு குறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.