தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் முரளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாடு அரசு ஐந்தாவது முறையாக கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கினையும், ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுடன் கூடிய ஊரடங்கு உத்தரவினை நீட்டித்துள்ளது.
இதில், இம்மாதத்தில் உள்ள நான்கு (05,12,19,26, ஆகிய தேதியில்) ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநிலம் முழுவதும், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு உத்தரவு (சனிக்கிழமை இரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிவரை) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களும் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை பொதுமக்களுக்கான பெட்ரோல், டீசல் விற்பனையினை தமிழ்நாடு அரசின் ஆணையின்படி வழங்குவது இல்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி அவசரத் தேவைகளுக்காகவும், அத்தியாவசிய தேவைகளுக்காகவும் (ஆம்புலன்ஸ், பால் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை) பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் குறைந்த எண்ணிக்கையிலான விற்பனையாளர்களை கொண்டு இயங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எதிர்வரும் திங்கள்கிழமை (06.07.2020) முதல் மாநிலத்தின் அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களுக்கு வருகின்ற வாடிக்கையாளர்கள், முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வரவேண்டும். முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்க முடியும் என்பதை தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சேல்ஸ் ப்ரோமோஷன் என்ற பெயரில் பல்வேறு விற்பனை மேம்பாட்டு நிகழ்வுகளை நடத்திவருகின்றன. இதன் மூலம் விற்பனையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே தகுந்த இடைவெளி பின்பற்ற முடியாமல் நோய்த்தொற்று ஏற்படுகின்ற அபாயம் நிலவுகிறது.
ஆகவே, கரோனா காலம் முடியும் வரை அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் இதுபோன்ற நிகழ்வுகளை விற்பனை நிலையங்களில் நடத்திடக்கூடாது என்பதை தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் வேண்டிக்கொள்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வந்த காங்கிரஸ் எம்.பிக்கள்