சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்பு (பிவிஎஸ்ஸி ஏஎச்) 4 ஆண்டு 6 மாதம் படிப்பும், 1 ஆண்டு உள்ளிருப்புப் பயிற்சியும் வழங்கப்படும். இதில் 580 இடங்கள் உள்ளன.
சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் 120 இடங்கள், நாமக்கல், திருநெல்வேலி, தஞ்சாவூர் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் தலா 100 இடங்கள், சேலம் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல் கூட்டுரோடு ஆகியவற்றில் 80 இடங்கள், தேனி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தலா 40 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
பி.டெக் உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பில் கொடுவளியில் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்கள், கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்பு ஓசூர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பில் கொடுவளியில் 20 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் 12ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பு, பி.டெக் படிப்பிற்கும் 14 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்னர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு அக்டோபர் 3ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. எனவே, கால்நடை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கும் அக்டோபர் 3ஆம் தேதி மாலை 5 மணி வரையில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடரும் மாணவர்களின் 'புட்போர்டு' பயணம் - நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை