சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது, சென்னை 2016ஆம் ஆண்டு அக்டோபரில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவி காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றமும், அந்த பேரூராட்சியின் சிற்றொகுதி உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை செய்துள்ளது.
கடம்பூர் பேரூராட்சியின் தனி அலுவலர் பதவிக் காலம் முடிவதற்கு முன்பு அங்கு தேர்தல் நடத்தும் நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இல்லை. எனவே கடம்பூர் பேரூராட்சியின் தனி அலுவலர் பதவி காலத்தை 1.7.2022 முதல் 31.12.2022 வரை நீட்டிக்க இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா நேற்று சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் குரல் வாக்கெடுப்பிற்குப் பின்பு நிறைவேறியது.
இதையும் படிங்க: ஆட்டோவில் விளையாடிய குழந்தையின் தந்தையை கொலை செய்ய முயற்சித்தவருக்கு சிறை தண்டனை