சென்னை: சென்னை பெருநகரில் இனி இஷ்டத்துக்கு பைக்கை முறுக்கிக்கொண்டு பறக்க முடியாது. 40 kmக்கு மேல் வாகனத்தை இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் அறிவித்துள்ளார். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 40 கிலோமீட்டர் வேகமும் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கிலோமீட்டர் வேகத்திலும் மட்டுமே பயணிக்க வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சாலை எவ்வளவு காலியாக இருந்தாலும் இந்த வேகத்தை மீறி வாகனத்தை இயக்கக் கூடாது எனவும், இதை மீறினால் ரூ.1000, அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விதிமீறலை கண்காணிப்பதற்காக புதிய தொழில்நுட்பங்களை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
அதில் ஒன்றுதான் Speed Radar Gun . சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல்துறை Mandark technology private limited மற்றும் சென்னை ஐஐடி ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து ஒரு கோடி ரூபாய் செலவில் நேரடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களை கண்காணிக்கும் வகையில தொழில்நுட்ப ரீதியான இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு அமைப்பு முதல்கட்டமா சென்னையில் 30 இடங்களிலில் பொருத்தப்பட்ட நிலையில் மேலும் 10 இடங்களில் ஜூன் 19ஆம் தேதியில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலையில் நம் வேகமாக பயணிப்பதும், சிக்னல்களை மதிக்காமல் கடந்து செல்வதும் காவல்துறைக்கு எப்படி தெரியும்? என நினைக்கிறீர்களா? அதற்கும் பதில் அளித்துள்ளார் காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால். அதாவது புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள இந்த தொழில்நுட்பம் மூலமாக வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் பயணித்தால், ரேடார் மூலமாக வண்டி எண் மற்றும் வண்டியின் விவரங்கள் அனைத்தும் கண்டறியப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு நேரடி அபராதத்திற்கான ஈ செல்லான் குறுஞ்செய்தியாக அவர்களின் கைபேசி எண்ணிற்கு சென்றுவிடும்.
மனிதர்களின் பார்வையில் இருந்து தப்பித்து விடலாம் ஆனால், இயந்திரங்களின் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாது என, மிக உறுதியாக அறிவித்துள்ளார் சென்னை மாநகர காவல் ஆணையர். மேலும், சோதனை ஓட்டத்திற்கு பிறகு கூடுதலாக 300 சந்திப்புகளில் ஆயிரம் சாலைகள் இந்த திட்டத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை நடவடிக்கை ஒருபுறம் இருக்க வாகன விபத்துக்கள் அன்றாடம் நம்மை எப்படி பாதிக்கிறது என்பதை பார்க்கலாம். வாகன விபத்து மற்றும் விபத்தால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு உள்ளிட்ட சம்பவங்களில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கையில் விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து சில தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதில், கடந்த 2021ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 15 ஆயிரத்து 384 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. அதே ஆண்டு இந்தியா முழுவதும் உள்ள 53 பெருநகரங்களில் மொத்தம் 55 ஆயிரத்து 442 விபத்துகள் நிகழ்ந்திருக்கிறது. இதில், 5,034 விபத்துகள் சென்னையில் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது.
அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், சாலை விபத்துகள் அதிகம் பதிவான மாநிலங்களில் 55 ஆயிரத்து 682 விபத்து சம்பவங்களுடன் முதலாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளால் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டதிலும் 8 ஆயிரத்து 259 எண்ணிக்கைகளோடு தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை தமிழ்நாட்டில் 14 ஆயிரத்து 415 விபத்துகள் நிகழ்ந்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளில் 5 ஆ யிரத்து 360 உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. 18 ஆயிரத்து 560 விபத்து நிகழ்வுகளுடன் மாநில நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் நிகழ்ந்துள்ள உயிரிழப்புகளில் 11 ஆயிரத்து 419 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
இப்படி விபத்துக்களினுடைய எந்த முனையை தொட்டாலும் தமிழகமும், சென்னையும்தான் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. இதனால் சென்னை மாநகர காவல்துறை எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை நம்முடைய நன்மைக்குத்தான் என்பதை புரிந்து கொண்டு சாலை விதிகளை மதிப்போம், உயிரை காப்போம்.
இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் இந்த உத்தரவிற்கு மக்களிடையே பல்வேறு தரப்பிலிருந்து மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
1. காலை 40 கிமீ,இரவில் 50 கிமீ என்ற வேக அளவை மாற்ற முடிவு.
2. காலை, இரவு பாதுகாப்பு வேக அளவை, அதிவேகம் தடுக்கும் கருவி மூலம் ஆய்வு செய்கிறது காவல்துறை.
3. முதற்கட்டமாக போடப்பட்ட ஸ்பீடு ரேடார் கண் கருவிகள் வாகன ஓட்டிகள் வேகமாக சென்றால் சலான் அனுப்பாது.
4. பாதுகாப்பான வேகம் நிர்ணயிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
5. வேகத்தை கணக்கிட்டு அபராதம் விதிக்கும் கருவிகள் தற்போது சென்னை நகர சாலைகளில் வாகன ஓட்டிகள் ஒவ்வொரு இடத்திலும் எந்தெந்த வேகத்தில் செல்கிறார்கள் என்ற கணக்கிடும் பணியை துவங்கி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. குறிப்பாக காலையில் 40 கிலோ மீட்டரும் இரவில் 50 கிலோ மீட்டர் வேகம் தாண்டி வாகன ஓட்டிகள் சராசரியாக எவ்வளவு வேகத்தில் செல்கிறார்கள் என கிடைக்கும் வேகத்தை குறிப்பிட்டு வரும் சலான்களை வைத்து ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
7. ஆனால் இந்த சலான்கள் வெறும் ஆய்வுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளதாகவும், மக்களுக்கு அனுப்பி அபராதம் பெறுவதற்கான நடவடிக்கை முதற்கட்டமாக இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. இந்த கருவிகள் மூலம் பெறப்பட்ட சலானின் அடிப்படையில் ஒவ்வொரு சாலை பகுதியிலும் குறைந்தபட்ச வேகம், காலை மற்றும் இரவு எவ்வளவு என்பதை நிர்ணயித்து அறிவிக்கப்படும் எனவும், அரசுக்கு பாதுகாப்பான வேகத்தின் அளவை மாற்றி அமைக்க பரிந்துரை செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9. தற்போது வரை நினைக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவே மக்கள் செல்லும் பாதுகாப்பான வேகம் என்பது இருப்பதாக தெரியவந்துள்ளது என சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு - அதில் இத்தனை சிறப்பம்சங்களா?