சென்னை விமான நிலைய ஓடுபாதை பராமரிப்புப் பணி ஒவ்வொரு வாரமும் பிற்பகல் 2.30 மணியிலிருந்து 4.30 மணி வரை நடக்கும். அப்போது ஓடுபாதை பகுதியில் கழிவுகள், காய்ந்த புற்செடிகள் போன்றவற்றை எரிப்பாா்கள். அப்போது தீப்பரவி விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக விமான நிலைய தீயணைப்பு வண்டிகளும் அருகே தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும்.
வழக்கம்போல் இன்றும் பராமரிப்புப் பணியும், தீவைத்து எரிக்கும் பணியும் நடந்தது. நாளை குடியரசுத் தலைவர் சென்னை வருவதையொட்டி, சுத்தப்படுத்தும் பணி சற்று அதிகமாக இருந்தது. அதனால் இன்று வழக்கத்தைவிட புகையும் சற்று அதிகமாகப் பரவியது.
அதைப்பாா்த்து ஜிஎஸ்டி சாலையில் வாகனங்களில் சென்றவா்கள், வாகனங்களை நிறுத்தி புகை மண்டலம் பரவிவருவதை செல்போன்களில் வீடியோ எடுத்து பலருக்கும் அனுப்பினா். அதோடு விமான நிலைய ஓடுபாதையில் தீ விபத்து என்றும், ஏதோ ஒரு வாகனம் தீப்பற்றி எரிகிறது என்றும் வதந்திகளைப் பரப்பிவிட்டனா்.
இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இது குறித்து விமான நிலைய அலுவலர்களைக் கேட்டபோது, அவர்கள் இது வழக்கமான பராமரிப்புப் பணிதான் என்றும், எந்த விபத்தும் இல்லை என்றும், சிலா் தேவையின்றி வதந்திகளைப் பரப்புகின்றனா் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சாத்தான்குளம் வழக்கு : ஜாமீன் கேட்டு காவலர்கள் மனு!