சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக பருவத்தேர்விற்கு பதிவு செய்து இருந்தால் அந்த கல்லூரி தேர்வு மையம் அமைப்பதற்கான அனுமதி கிடையாது, தன்னாட்சிக் கல்லூரி அங்கீகாரம் பெறுவதற்கு முன்னர் படித்து அரியர் வைத்து இருந்தாலும், மாணவர்கள் படித்த பொறியியல் கல்லூரி மூடப்பட்டு, அரியர் வைத்து இருந்தாலும் அருகில் உள்ள கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று இயங்கி வரும் பொறியியல் கல்லூரியில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் படிப்பவர்களுக்கு தேர்வு கட்டுப்பாட்டு அலுவகம் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஒரு ஆண்டிற்கு இரு பருவத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தன்னாட்சிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகளை அவர்களே நடத்தி மதிப்பெண்களை வழங்குவர். அவர்களுக்கும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவகத்தின் மூலம் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்டப்படிப்பிற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்த நிலையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள பருவத் தேர்விற்கான தேர்வு மையங்கள் சில கல்லூரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கான தகவலை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் படி சில கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வேறு கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்திடம் விளக்கம் கேட்ட போது, "சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக பருவத் தேர்விற்கு பதிவு செய்து இருந்தாலோ, தன்னாட்சிக் கல்லூரியின் அங்கீகாரம் பெறுவதற்கு முன்னர் படித்து, அரியர் வைத்திருந்தாலோ, மாணவர்கள் படித்த பொறியியல் கல்லூரி மூடப்பட்டு, அதனால் அரியர் வைத்திருந்தாலோ அவர்களுக்கு அருகில் உள்ள கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் பருவத் தேர்வுகள் நடைபெறும் போது ஒரு கல்லூரியில் இருந்து 50 மாணவர்களுக்கு குறைவாக பதிவு செய்திருந்தால், அந்தக் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்படமாட்டாது" என விளக்கம் அளித்துள்ளது.