சென்னை: ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் சிலர் அத்துமீறி நுழைய இருப்பதாக கூறி, அதற்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஜெயக்குமார், "அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் சிலர் அத்துமீறி நுழைய இருப்பதாக வந்த தகவலையடுத்து, அதற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
மேலும், பொதுக்குழு கூட்டம் தொடர்பான தீர்ப்பு, வரும் திங்கட்கிழமை (ஜூலை 11) ஒத்திவைத்திருப்பது குறித்த கேள்விக்கு, "நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதுகுறித்து வெளியில் பேச முடியாது. 100 சதவீதம் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். மேலும், பொதுக்குழு கூட்டத்திற்கு அதன் உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. வரவேண்டியவர்கள் சென்னைக்கு வர தொடங்கிவிட்டனர்.
ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும், மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேட்டி அளித்ததன் மூலம், அவர்களின் திட்டம் வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. ஒருமுறை, ஓபிஎஸ்-க்கும் திமுகவிற்கும் தொடர்பு இருப்பதாக சசிகலாவே தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சரை பாராட்டி ஓபிஎஸ் மகன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிமுகவில் இருந்து கொண்டு இப்படி செயல்படுவது சரியா.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கட்டுப்பாட்டின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது. பழிவாங்கும் நடவடிக்கையாக முதலமைச்சரின் ஏவுதலின் பேரில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. ஆனால், முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவில்லை" என கூறினார்.
இதையும் படிங்க:அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருவதற்கு எந்த உரிமையும் கிடையாது - ஜெயக்குமார்