சென்னை: முன்னாள் முதலமைச்சரும் கல்விக்கண் திறந்தவர் என அழைக்கப்படுபவருமான பெருந்தலைவர் காமராஜரின் 119ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி சென்னை திநகரில் இருக்கும் அவரது நினைவு இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின், ஜெயக்குமார், தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கரு நாகராஜன், பெருந்தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன், தேமுதிகவைச் சேர்ந்த அழகாபுரம் மோகன்ராஜ், எர்ணாவூர் நாராயணன், தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
அப்போது காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”கல்வித்தரத்தை தமிழ்நாட்டில் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை காமராஜர் மேற்கொண்டுள்ளார்.
மேகதாது விவகாரம் குறித்து அதிமுக ஏற்கனவே தனது நிலைப்பாட்டை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்துள்ளது. நாளைக்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் அதிமுக சார்பாக நான் பங்கேற்கிறேன்” என்றார்.
தொடர்ந்து, கொங்குநாடு விவகாரத்தில் அதிமுக எந்த ஒரு கருத்தும் சொல்லாத நிலையில் அதன் கருத்து என்ன என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, ”அத்தைக்கு மீசை முளைக்கட்டும், பின்னர் பார்த்துக்கொள்ளலாம்” என பதிலளித்தார்.
இதையும் படிங்க: வாரணாசியில் பிரதமர் மோடி- யோகி அரசுக்கு பாராட்டு!