சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் காலியாக அறிவிக்கப்பட்டது, ஈரோடு கிழக்கு தொகுதி. பின்னர், இத்தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் திமுக - காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்பட 77 பேர் இறுதி வேட்பாளர்களாக களம் கண்டனர்.
இந்த தேர்தல் முடிவில் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இதனையடுத்து அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை விட 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்ற பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, திருமாவளவனையும், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரான கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து நன்றி பாராட்டினார். அவ்வப்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை அவ்வப்போது சந்தித்தும் வந்தார்.
அந்த வகையில் டெல்லியில் தலைவர்களை சந்தித்துவிட்டு, நேற்று மாலை சென்னைக்கு திரும்பி உள்ளார், ஈவிகேஎஸ் இளங்கோவன். சென்னைக்கு திரும்பியதும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மூச்சுத்திணறல் மற்றும் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
இவரை காங்கிரஸ் கட்சி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று மதியம் நேரில் சென்று ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அதுமட்டுமின்றி அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து ஈவிகேஎஸ் உடல் நிலையைப் பற்றி மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், "நேற்று மாலை ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் லேசான நெஞ்சு வலியுடன் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் குணமடைவார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் வரை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் மதியத்திற்கு மேல் சாதாரண சிகிச்சை வார்டுக்கு (Normal ward) மாற்றப்பட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் வேகமாக பரவும் கரோனா… மத்திய அரசு எச்சரிக்கை