சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ஈவிகேஎஸ் இளங்கோவன், டெல்லி சென்று காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் கடந்த 15ஆம் தேதி சென்னை திரும்பினார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அன்றைக்கே சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து அவருக்கு இருதய பாதிப்பும், கொரோனா பாதிப்பும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நலன் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவின. இதையடுத்து கடந்த 22ஆம் தேதி தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டதாகவும், தற்போது இருதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தது. தான் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் குணமடைந்து திரும்புவேன் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவனும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று(மார்ச்.30) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இருதய பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். திருமகன் மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இளங்கோவன் சில நாட்களுக்குள்ளாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டது, தொகுதி மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அவர் உடல்நலம் தேறி வரும் செய்தி, மருத்துவமனை நிர்வாகத்தால் வெளியிட்ப் பட்டுள்ளது.
இதையும் படிங்க: புறக்கணிக்கப்படுகிறதா அம்மா உணவகங்கள்? சட்டப்பேரவையில் சூடான விவாதம்!