சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தின் பொறுப்பு நீதிபதியாக உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், புழல் சிறையில் கடந்த ஜூலை 25ம் தேதி திடீரென சோதனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தினார்.
இதில், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைய குழு உறுப்பினர் நசிர் அகமது, திருவள்ளுவர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வ சுந்தரி மற்றும் தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ளது போல, சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டுமென அரசை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கும், சிறைக்கு வரும் பார்வையாளர்களுக்கும் அறை வசதி, மின் விசிறி, தரமான உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள கைதிகளுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் மற்றும் கண்பார்வை சரியாக தெரியாதவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை தண்டனை காலம் முடிவதற்கு முன்பே விடுதலை செய்வது குறித்தும் பரிசீலிக்கலாம்.
தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் கைதிகளின் குறைகள் களைய சிறைத்துறை, காவல்துறை இயக்குநர் மற்றும் சட்டப்பணிகள் ஆணையம் இணைத்து சிறப்பு அதிகாரியை நியமிக்கலாம். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏதுவாக காவலர் ஒருவரை பாதுகாப்புக்கு நியமிக்கலாம்.
தொழிலாளர் சட்டத்தின்படி கைதிகளுக்கு சம்பளம் சரியான நேரத்தில் வழங்கப்பட வேண்டும். ஆனால் சரியாக வழங்கப்படுவதில்லை என்ற கைதிகளின் குற்றச்சாட்டை சிறைத்துறை அதிகாரிகள் தீர்க்க வேண்டும். கைதிகளுக்கு தங்கள் வழக்குகளில் ஆஜராக வழக்கறிஞர்கள் இல்லாத போது சட்டப்பணிகள் ஆணையம் வழக்கறிஞர்களை நியமித்து கால தாமதத்தை குறிக்க வேண்டும்.
அதேபோல, ஆறு வயது வரையிலான குழந்தைகள் சிறையில் தாயுடன் வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், அந்த குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்குவதுடன், சிறையிலேயே மழலையர் பள்ளிகளை துவங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்றம் ஜாமீன் அளித்தும் பிணைய தொகை செலுத்த முடியாத காரணத்தால் கூடுதல் காலம் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சிறை வாசிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டுமெனவும் அரசிடம் வலியுறுத்த அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் வெற்றியை எதிர்த்த வழக்கு - உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!