சென்னை: தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில், அமைந்துள்ள சென்னை உயர்நிலைப் பள்ளி அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி அன்று 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அறிவிப்புகளை வெளியிட்ட அத்துறையின் அமைச்சர், தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 5,329 டாஸ்மாக் மதுபானக் கடைகளில், விதிகளுக்கு அப்பாற்பட்டு அதாவது பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் கடைகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்துக்குள் இருக்கும் கடைகள் மற்றும் மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் கடைகள் ஆகியவற்றை கணக்கெடுக்கும்படி உத்தரவிடப்பட்டது. அதன்படி, 500 டாஸ்மாக் கடைகளை கடந்த ஜுன் 26ஆம் தேதி தமிழக அரசு மூடியது.
அதில், சென்னை மண்டலத்தில் 138 கடைகளும், கோவை மண்டலத்தில் 78 கடைகளும், மதுரை மண்டலத்தில் 125 கடைகளும், சேலம் மண்டலத்தில் 59 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 100 கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 61 கடைகள் மூடப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் அருகில் 100.மீ தூரத்துக்குள் மதுபானக் கடை (டாஸ்மாக்) இருக்கக் கூடாது என்பது அரசின் வழிகாட்டல். ஆனால், சென்னை மாநகராட்சிப் பகுதியில், உள்ள தேனாம்பேட்டை அடுத்த திருவள்ளுவர் சாலையில் இருக்கும் சென்னை உயர் நிலைப் பள்ளியில் இருந்து 150-மீட்டருக்குள் ஒரு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் சந்திக்கும் இன்னல்கள்: இந்த கடையானது, மக்கள் வசிக்கும் பகுதிக்கு மத்தியிலும் இருக்கிறது, இதனால், இந்த பகுதியில், வசிக்கும் மக்கள், பள்ளி மாணவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இது குறித்து அங்கு வசிக்கும், ராஜேஷ் என்பவர் கூறியதாவது; "நான் இந்த பகுதியில் கடந்த 10 வருடங்களாக வசித்து வருகிறேன். இந்த டாஸ்மாக் கடை எதிரில் தான் என் வீடு இருக்கிறது.
தினமும் மதியம் 12 மணி முதல், இரவு 10 மணி வரை, குடித்து விட்டு பாட்டில்களை வீட்டுவாசலிலோ, சாலைகளிலோ வீசிவிட்டுச் சென்று விடுகிறார்கள். மாலை மற்றும் இரவு நேரத்தில், குடித்து விட்டு, நடைபாதை அல்லது, வீட்டின் வாசலில் விழுந்து விடுகிறார்கள். இது குறித்து, நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் போது, அந்த சமயம் மட்டும் காவல் துறை வந்து அவர்களை விரட்டி விடுகிறார்கள். மீண்டும் மறு நாள் நாங்கள் அதே பிரச்னையைத் தான் சந்திக்கிறோம். இது தொடர்பாக நாங்கள் 123ஆவது வார்டு கவுன்சிலர் அவர்களிடம் புகாரும் கொடுத்துள்ளோம்" என்று கூறினார்.
பள்ளி ஆசிரியையின் கூற்று: இது குறித்து அங்கு இருக்கும் பள்ளி ஆசிரியை ஒருவர் கூறியதாவது, "இந்த பகுதியில் இரண்டு பள்ளிகள் உள்ளன. ஒன்று உயர்நிலை மற்றொன்று தொடக்கப்பள்ளி. இங்கு சுமார் 600 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். காலையில் வரும் போது அவர்களுக்கு பிரச்னை இல்லை, மாலையில் வீட்டிற்குச் செல்லும் போது, அந்த மதுபானக் கடையின் முன் விழுந்து கிடப்பவர்கள், அவ்வப்போது சண்டை சச்சரவில் ஈடுபடுவதால் மாணவர்கள் அதனை நின்று பார்ப்பார்கள். இதனால் அவர்களுக்கு உளவியல் ரீதியாகப் பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது.
கல்வி நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 100-மீ தூரத்தில் தான் மதுபானக் கடை இருக்க வேண்டும். ஆனால் இங்கு சரியாக 100-மீ தான் இருக்கிறது. மேலும், சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 61 கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வந்த உடன், நாங்கள் இந்த கடையும் மூடிவிடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை" என்று கூறினார்.
மேலும் பேசிய பள்ளி ஆசிரியை, சிலசமயங்களில் பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவர் அருகில் மதுபானப் பாட்டில்கள் இருப்பதாகவும், சில சமயங்களில், பள்ளிக்கூடத்தின் வாசல் முன்பே குடிபோதையில் விழுந்து இருப்பார்கள் என்றும், இது குறித்து மாநகராட்சி அதிகாரி மற்றும் மாநகராட்சி கல்வி அதிகாரிகள் ஆகியோரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில், பெற்றோர்கள் பலமுறை தங்களிடம், இது குறித்து கோரிக்கை வைப்பதாகவும், மாணவர்களை சிலரை அங்கு இருக்கும் சிலர் தொந்தரவு செய்வதாக பெற்றோர்கள் தெரிவிப்பதாகவும் பள்ளி ஆசிரியை தெரிவித்தார்.
மாமன்ற உறுப்பினரின் பதில்: இது குறித்து 123-ஆவது மாமன்ற உறுப்பினர் எம்.சரஸ்வதி அவர்களிடம் கேட்டபோது, "சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. இந்த 15 மண்டலங்களில், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் உள்ளன. பள்ளிக்கு அருகில், டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது, ஆனால் இங்கு சென்னை மாநகராட்சி பள்ளிக்கு 150 மீ தூரத்தில் தான் டாஸ்மாக் இருக்கிறது" என்று பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய மாமன்ற உறுப்பினர், இங்கு பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைவதாகவும், பள்ளி மாணவர்கள் மாலை வீடு திரும்பும் போது, பாதுகாப்பின்றி உணருவதாக பெற்றோர் தரப்பில் கூறப்படுவதாகவும், தான் பதவி ஏற்ற நாள் முதல் மாமன்ற கூட்டங்களில், இந்த பிரச்சினையை குறித்து பேசி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் விரைவில் இதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
அதிகாரிகளின் பதில்: இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "இதன் தொடர்பாக மாமன்ற உறுப்பினர்கள் இடமும் இருந்தும், பள்ளி நிர்வாகம் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் எங்களுக்கு கோரிக்கை வந்துள்ளது, விரைவில் நாங்கள் துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர். மேலும் டாஸ்மாக் அதிகாரிகள், இந்த குறிப்பிட்ட டாஸ்மாக் எண்.894 உள்ள கடையை குறித்து விரைவில் ஆய்வுகள் நடத்தி, நிர்ணயம் செய்யப்பட்ட அளவில், கடையின் தூரம் இருக்கிறதா என்றும், அதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தார்ப்பாய் தான் வீடு.. சொந்த ஊரிலே அகதியான பூர்வகுடிகள்.. விடிவுகாலம் எப்போது?