சி.பா.ஆதித்தனாரின் 116ஆவது பிறந்த நாள்
’தமிழர் தந்தை’ என்று அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 116 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். கடந்த வருடம் முதல் சி.பா. ஆதித்தனாரின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதழியல் முன்னோடிகளுள் ஒருவரான சி.பா. ஆதித்தனார், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
மன் கி பாத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் உரையாற்றிவருகிறார். ஒவ்வொரு மாதத்திலும் உள்ள கடைசி ஞாயிற்றுக்கிழமையில் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று மனதின் குரல் எனப்படும் மன் கி பாத் நிகழ்ச்சியில் காலை 11 மணியளவில் அவர் உரையாற்ற உள்ளார்.
உலக சுற்றுலா தினம்
உலக சுற்றுலா தினம் வருடா வருடம் செப்டம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கரோனா ஊரடங்கின் மத்தியில் உலக அளவில் சுற்றுலாத் துறை பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், ”சுற்றுலாத் துறையும், ஊரக வளர்ச்சியும்” என்ற தீமின் அடிப்படையில் இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட உள்ளது.
மேலும் இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறை சார்ந்த பகுதிகள், தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் திறக்கப்பட முழு வீச்சில் தயாராகி வருகின்றன.
இன்றைய ஐபிஎல் போட்டி : ராஜஸ்தான் ராயல்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்
13ஆவது ஐபிஎல் சீசன் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், இன்றைய போட்டி அனல் பறக்கும் வகையில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று (செப்.27), பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 76.27 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 76.40 ரூபாய்க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று டீசலின் விலை 13 காசுகள் குறைந்துள்ளது.