ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிற்பகல் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத் துறை அ அமைச்சர் காமராஜ் மற்றும் பிற அலுவலர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
நாடு முழுவதும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா அதிகம் பாதித்த மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதலமைச்சர்கள், சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுச்சேரியில் இன்று முதல் சுகாதார நிலையங்களுக்கு கிரேட் முறை - கிரண்பேடி உத்தரவு
கோவிட்-19 கண்டறிதல் பரிசோதனையில் முக்கியப் பங்காற்றிவரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இன்று (செப்.23) முதல் கிரேட் முறையில் தரவரிசைப்படுத்தப்படுமென துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சுகாதாரத்துறை செயலரும், மாவட்ட ஆட்சியருமான அருணுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கரோனா வைரஸ் தொற்றுநோய் - டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், நோய் பாதிப்பால் அதிகரிக்கும் உயிரிழப்புகளுக்கான காரணம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில், நோய் தடுப்பு முன்னெடுப்பில், பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முக்கியப் பங்காற்றி வருவதால், அவற்றின் பணிகளை மேம்படுத்த இன்று முதல் கிரேட் முறையை அமல்படுத்தி, அவற்றை தரவரிசைப்படுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஐபிஎல் போட்டி : கொல்கத்தா-மும்பை இன்று மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 5ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகள் மோதுகின்றன.
அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டியில் தினேஷ் காா்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி களமிறங்குகிறது. மற்றொரு புறம், சென்னையுடனான முதல் ஆட்டத்தில் தோல்வியுற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இப்போட்டியை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. அபுதாபியில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக ஆன்லைன் ஸ்டோர் இன்று தொடக்கம்
இந்தியாவின் முதல் பிரத்யேக ஆன்லைன் ஸ்டோரை ஆப்பிள் நிறுவனம் இன்று தொடங்கி வைக்கிறது. இது உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் 38ஆவது ஆன்லைன் ஸ்டோர் ஆகும்.
வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கான நிபுணர்கள், இலவச மற்றும் பாதுகாப்பான டோர் டெலிவரி, ஸ்மார்ட்போன் எக்ஸ்ஜேஞ்ச் கூடுதல் வசதிகள் இணைப்பு உள்ளிட்ட இந்த ஆன்லைன் ஸ்டோரின் எட்டு நன்மைகளையும் ஆப்பிள் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.