ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள 45 வயதான பெண் யானை வேதநாயகி, உடல்நலக் குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து யானையை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க வனத்துறைக்கு உத்தரவிடக்கோரி விலங்கின ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஹி மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சொக்கலிங்கம், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத் துறையால் பராமரிக்கப்படும் யானை வேதநாயகி வயது முதிர்வு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
யானை வேதநாயகி கடந்த சில வருடங்களாக உணவு மற்றும் மருந்து உட்கொள்ளாததால் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அதை உடனடியாக யானைகள் முகாமுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து, மாவட்ட சமூகநல குழுவிடம் மனுதாரர் புகார் அளிக்கவும், நேரடியாக வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது. அதன் பிறகு தேவை இருந்தால் நீதிமன்றத்தை மனுதாரர் அனுகலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், வருடத்திற்கு ஒரு முறை மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும், தலைமை வனப் பாதுகாவலருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விதியை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மாவட்ட சமூக நலத்துறை, கால்நடைத் துறை அதிகாரிகளால் யானையை ஆய்வு செய்து தலைமை வன பாதுகாவலருக்கு தெரிவிக்க வேண்டும். அதன் பேரில் யானைக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வனத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிக்க: குன்னூர் பகுதியில் பாலத்தைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!