பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி திருக்குறள் மாநாடு நடைபெறுகிறது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, 'கேரளாவில் நடந்த பிராமணர் மாநாட்டில் மனிதர்கள் அனைவரும் சமமில்லை, சமமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரசியல் சாசனத்திற்கு விரோதமான கருத்தை முன்வைத்தனர்.
அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அனைத்து உயிர்களும் சமம் என்று பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று மொழிந்த திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை மாநாடாக தந்தை பெரியார் வழியில் 1949ஆம் ஆண்டு நடத்த மாநாட்டின் தொடர்ச்சியாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சென்னையில் ஒருங்கிணைத்துள்ளது. நாம் அனைவரும் சமம், நமக்குள் ஏற்றத்தாழ்வு கிடையாது என்பதை உணர்த்த இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
ஆனால், இதை கொச்சைப்படுத்தும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தவறான கருத்துகளை கூறிவருகிறார். திருக்குறளில் சனாதனத்தை பற்றி எந்த குறிப்புகளும் இல்லை. மனிதர்கள் சமமற்றவர்கள் என்பதே இந்துத்துவத்தின், வேதத்தின் அடிப்படை கருத்து. எங்கள் வீடுகளில் திருக்குறள் இருக்கிறது. அவர்கள் வீடுகளில் வேதங்கள் இருக்கிறது. ஆசியாவில் பல்வேறு கருத்துகளை கொண்டுள்ளவர்கள் இருந்தாலும் திருக்குறள் மீது அவர்களுக்கு கசப்புணர்வு கிடையாது.
ஹெச்.ராஜா, பாஜக மட்டும் ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்றால் மனிதர்கள் அனைவரும் சமம் என்று திருக்குறள் கூறும் கருத்துகளை மக்களிடையே கொண்டு செல்வதால் எதிர்க்கிறார்கள். அனைத்து தடைகளையும் மீறி இந்த மாநாடு மாபெரும் வெற்றி அடையும். இது வரலாற்று சிறப்புமிக்க மாநாடு' என்றார்.