சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதன் மூலம் நீண்ட நாட்களாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே ஏற்பட்டு வந்த மோதல்கள் முடிவுக்கு வந்தன. இதனால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவளார்களை நீக்கிய பகுதிகளில் அதிமுகவின் செல்வாக்கை அதிகப்படுத்துவதற்கான வேலைகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இறங்கியுள்ளனர்.
அதிமுகவை முழுமையாக கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலில் தனது தலைமை பண்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அப்போது, அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன், தனியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை தொடங்கினார்.
இதனால், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் மிகப்பெரிய அளவில் வாக்குகள் பிரிந்தன. குறிப்பாக, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சுமார் 28 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை அமமுக பாதிப்படைய செய்தது.
அப்போது, ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் ஒன்றாக இருந்தபோதே தேர்தலில் வெல்ல முடியவில்லை. ஆனால், தற்போது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கதால் மேலும் வாக்குகள் பிரியும் என கூறப்படுகிறது. பலமுறை அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என ஓபிஎஸ் கூறிய நிலையில் அதற்கு ஈபிஎஸ் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால், வேறுவழி இல்லாத ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கும் நோக்கத்தில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். தனது செல்வாக்கை நிரூபிக்க திருச்சியில் கடந்த மாதம் 24ஆம் தேதி ஓபிஎஸ் மாநாடு நடத்தினார்.
இதனையடுத்து, சில நாட்களுக்கு முன்பு யாரை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கினாரோ, தற்போது எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க அவரரோடு (டிடிவி தினகரன்) ஓபிஎஸ் இணைந்து உள்ளார். இதனால் தனது இருப்பை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி கூடுதலாக செயல்பட வேண்டி இருக்கிறது. சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகிய மூன்று பேரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தென்மாவட்டங்களில் ஈபிஎஸ்க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆள்பிடி அரசியலில் எடப்பாடி பழனிசாமி இறங்கினார். ஓபிஎஸ் அணி மற்றும் அமமுகவில் உள்ள முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை அதிமுகவிற்கு அழைத்து வர நிர்வாகிகளுக்கு ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பலனாக அமமுகவில் இருந்த ஒரே ஒரு சேர்மன் ம.சேகரை முன்னாள் அமைச்சர் காமராஜை வைத்து அதிமுகவில் இணைய வைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ்-ன் தளபதிகளில் ஒருவரான வைத்திலிங்கத்திடம் பலமுறை அதிமுகவில் இணையுமாறு மறைமுகமாக அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், வைத்திலிங்கம் ஓபிஎஸ் மீது இருந்து விஸ்வாசத்தால் எடப்பாடியின் அழைப்பை மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஒருங்கிணைந்த அதிமுகவாக இருந்தபோது டெல்டா மாவட்டங்களின் தளபதியாக அறியப்பட்டவர் வைத்திலிங்கம். இவருக்கு பதிலாக டெல்டாவில் ஒரு தலைவரை உருவாக்க நினைத்த எடப்பாடி பழனிசாமி, இதற்காக முன்னாள் அமைச்சர் காமராஜை தேர்வு செய்தார்.
வைத்திலிங்கமும், காமராஜும் டெல்டா மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காமராஜை வளர்த்துவிடும் பட்சத்தில் வைத்திலிங்கத்தின் செல்வாக்கு குறையும் என்பது எடப்பாடி பழனிசாமியின் கணிப்பு.
டெல்டா மாவட்டங்களில் அமமுகவிற்கும் வாக்குகள் உள்ளன. இதனால், காமராஜின் வளர்ச்சி அமமுகவிற்கும் சவாலாக இருக்கும் என எடப்பாடி பழனிசாமியின் கணிப்பாக இருக்கிறது. இந்த நிலையில் தான் தஞ்சாவூரில் மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் சிலை திறப்பு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, முதல் முறையாக டெல்டாவிற்கு பயணம் மேற்கொண்டார்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமமுகவில் இருந்து சமீபத்தில் அதிமுகவில் இணைந்த ம. சேகரும், முன்னாள் அமைச்சர் காமராஜும் செய்தனர். ம. சேகர் சமீபத்தில் அதிமுகவில் இணைந்ததால் அவர் தலைமையில் அமமுகவில் இருந்து 10ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் அதிமுகவில் இணையும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
துரைக்கண்ணுவின் சிலையை திறந்து வைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "நீண்ட நாட்களுக்கு முன்பே துரைக்கண்ணுவின் சிலை திறந்திருக்க வேண்டியது. ஆனால் கல்வெட்டில் கெட்டவர்கள் பெயர் இடம் பெறக்கூடாது என தாமதம் ஆகியிருக்கிறது. நான் முதலமைச்சராக இருக்கும் போதே துரைக்கண்ணுக்கு சிலை திறக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் தொடர்ந்து என்னிடம் கேட்டனர். ஆனால், அனைத்து முறையும் அதை தடை செய்தவர் வைத்திலிங்கம்" என நேரடியாக வைத்திலிங்கத்தின் மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறுகையில், "சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் பிளவால் அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கி தேய்ந்துள்ளது. 90 விழுக்காடுக்கு மேல் நிர்வாகிகள், கட்சி மற்றும் சின்னம் ஆகியவை எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் இருக்கிறது. ஆனால், அதிமுகவின் அடிமட்ட வாக்கு வங்கி தேய்ந்திருப்பதை தலைவர்கள் உணர வேண்டும். எடப்பாடி பழனிசாமி டெல்டாவில் வைத்திலிங்கத்தை வீழ்த்த எடுத்திருக்கும் முயற்சி சரிதான், ஆனால் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருப்பதால் அதற்கான வாய்ப்பு குறைவு.
இருந்தாலும் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்திற்கு இது போன்ற முயற்சிகளை அனைத்து பகுதிகளிலும் எடுத்துத்தான் ஆக வேண்டும். சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் நீக்கம், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு போன்ற விவகாரங்களால் தென் மாவட்ட மக்கள் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளனர். இவர்கள் சமூகத்தில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கி இவர்களின் பிளவை ஈடுகட்ட எடப்பாடி பழனிசாமி நினைக்கின்றார். ஆனால், இது எந்த அளவிற்கு பலன் தரும் என்பதை நாடாளுமன்ற தேர்தலில்தான் தெரியும்" என கூறினார்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். மேலும், 16 லட்சம் விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ததில் டெல்டாவில் அதிக விவசாயிகள் பயன் பெற்றனர். இதையெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளிலும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இறங்கி உள்ளனர். டெல்டாவில் வைத்திலிங்கத்தை வீழ்த்த எடப்பாடி பழனிசாமியின் வியூகம் சரியாகுமா? என்பதை பொறுத்து இருந்தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கெட்டது சட்டம் ஒழுங்கு!? மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் - கொதித்த ஈபிஎஸ்