ETV Bharat / state

ஓபிஎஸ் உதைத்தது அதிமுக அலுவலகத்தை அல்ல: தொண்டர்களின் நெஞ்சை.. ஈபிஎஸ் கடும் விமர்சனம்! - TN CM

ஓபிஎஸ் உதைத்தது அதிமுக அலுவலகத்தை அல்ல,தொண்டர்களின் நெஞ்சை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

ஓபிஎஸ் உதைத்தது அதிமுக அலுவலகத்தை அல்ல: அதிமுக தொண்டர்களின் நெஞ்சை.. ஈபிஎஸ் கடும் விமர்சனம்!
ஓபிஎஸ் உதைத்தது அதிமுக அலுவலகத்தை அல்ல: அதிமுக தொண்டர்களின் நெஞ்சை.. ஈபிஎஸ் கடும் விமர்சனம்!
author img

By

Published : Aug 8, 2022, 11:53 AM IST

திண்டுக்கல்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பழனிக்கு வருகை தந்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுகவை வீழ்த்தி விடலாம் என கனவு காண்கிறார். அதிமுகவை வீழ்த்த ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் மக்கள் துணைகொண்டு வீழ்த்துவோம்.

அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவிற்கு குடும்பம் கிடையாது. அவர்களுக்கு மக்கள்தான் குடும்பம் என வாழ்ந்து மறைந்தனர். ஆனால் திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதிமுகவில் சாதாரண தொண்டன்கூட முதலமைச்சராக வர முடியும். சந்தர்ப்ப சூழ்நிலையால் நீங்கள் (முதலமைச்சர் ஸ்டாலின்) இன்று தமிழ்நாடு முதலமைச்சராக உள்ளீர்கள்.

இனி இலங்கை நிலைதான்: மக்களின் குறைகளை தீர்க்கவே ஸ்டாலினை முதலமைச்சராக அமர வைத்துள்ளார்களே ஒழிய, மக்களை பலி வாங்க அல்ல. நீங்கள் (முதலமைச்சர் ஸ்டாலின்) மக்களை மறந்தால் மக்கள் உங்களை மறப்பார்கள் என்பதை நினைவில் கொண்டு ஆட்சி செய்யுங்கள். குடும்ப ஆட்சி நடைபெற்ற இலங்கையின் இன்றைய நிலையை மனதில் வைத்துக்கொண்டு ஸ்டாலின் ஆட்சி நடத்த வேண்டும்.

தனது குடும்பத்தின் அதிகார மையங்களை கட்டுப்படுத்த முடியாத முதலமைச்சர் ஸ்டாலின், இதே நிலை நீடித்தால் இலங்கையை போல தமிழ்நாட்டில் உங்கள் குடும்பத்திற்கும் அதே நிலைதான் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் கவலைப்படாமல் ஸ்டாலின் போட்டோ சூட் நடத்தி கொண்டு வருகிறார்.

ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் ஆகியும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு இதுவரை என்ன செய்தார் ஸ்டாலின்? அனைத்து துறைகளிலும் லஞ்சம். திமுக அமைச்சர்களுக்கு காலை முதல் மாலை வரை லஞ்சம் வாங்கி, கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள்.

பழனியில் ஈபிஎஸ் பேச்சு

உலகின் பெரிய பணக்காரர்களாக வருவதற்காக இந்த ஆட்சியை ஸ்டாலின் பயன்படுத்தி வருகிறார். ஆட்சியில் அதிமுக இருந்தாலும் இல்லையென்றாலும், மக்கள் பிரச்னைகளை பற்றி சிந்திக்கும் கட்சி அதிமுக. மேட்டூர் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மக்கள் வெள்ளத்தில் சிக்கியபோதும், யாருமே சென்று பார்க்கவில்லை.

சேதப்படுத்திய ஓபிஎஸ்: அதிமுகவில் பிளவை ஏற்படுத்தி தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்க ஸ்டாலின் திட்டமிட்டார். அவருடன் இணைந்து அதிமுகவின் இருபெரும்‌ தலைவர்களுக்கும், அதிமுகவிற்கும், அதிமுக தொண்டர்களுக்கும் துரோகம் செய்தவர் ஓபிஎஸ். அதிமுகவினர் கோயிலாக எண்ணும் அதிமுக தலைமை அலுவலகத்தையும், ஜெயலலிதா இருந்த அறையையும் காலால் உதைத்து ஈவு இரக்கமின்றி அங்குள்ள பொருட்களை சேதப்படுதியவர், ஓபிஎஸ்.

அவர் உதைத்தது அலுவலகத்தை அல்ல; ஒன்றரைக்கோடி அதிமுக தொண்டர்களின் நெஞ்சில் உதைப்பதற்கு சமம். திருட்டுத்தனமாக எடுத்துச் சென்ற ஆவணங்களையும்‌, பொருட்களையும்‌ மீட்டுத் தர முடியாத அரசு திமுக அரசு. பலம் பொருந்திய அதிமுகவிற்கே இந்நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?

மக்கள் விரோத அரசு எப்போது போகும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 60 அமாவாசைகளில் 14 அமாவாசைகள் சென்றுவிட்டன. மீதமுள்ள 46 அமாவாசைகள் முடியும் முன்பே வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும். போதைப்பொருளால் இளைஞர்களும் மாணவர்களும் சீரழிகின்றனர்.

அதிக வரி உயர்வு: இதைக் கட்டுப்படுத்த முடியாத ஸ்டாலின் நமது ஒத்துழைப்பு வேண்டும் என கூறுவதற்கு வெட்கமாக இல்லையா? ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டுமென பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிமுக ஆட்சியில் தடை செயத ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை, திமுக ஆட்சியில் நீதிமன்றத்தில் சரியாக வாதாடாமல் திறந்து விட்டுள்ளனர்.

ஆன்லைன் ரம்மியை நடத்தும் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதற்காக மக்களின் கருத்தை கேட்பதாக நாடகமாடுகிறார், ஸ்டாலின். ஸ்டாலின் அரசு குழு அரசாங்கம். தற்போது வரை 38 குழுக்கள் அமைத்தும் இதுவரை எதுவுமே செய்யவில்லை. விரைவில் ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும்.

மக்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் வீட்டு வரி, மின்சார வரி, பால்விலை என அனைத்தையும் ஏற்றி வாக்களித்த மக்களுக்கு அருமையான அற்புதமான பரிசை அளித்துள்ளார் ஸ்டாலின். மக்கள் வரும் காலங்களில் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்” என பேசினார்.

இந்நிகழ்ச்சியில்‌ முன்னாள் அதிமுக அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை ரூல் கர்வ் விதியினை ரத்து செய்திடுக - ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.