சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் உணவுத்துறை அமைச்சர் தலைமையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “தமிழ்நாட்டின் எல்லையில் வருகின்ற மாவட்டங்களில் பிற மாநிலங்களுக்குத் தருவதற்கு ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பதற்கு, இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ரேஷன் அரசி கடத்துபவர் மீது குண்டர் சட்டம் மீது பாய்ந்துள்ளது.
தஞ்சாவூரில் அதிக மழை பெய்த காரணமாக 5,000 நெல் மூடை நனைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்திருக்கிறார். அது முற்றிலும் தவறான செய்தி. இது அவரது வகிக்கும் பதவிக்கு அழகல்ல. மேலும், தொடர்ந்து தவறான தகவல்களை அறிக்கையாக வெளியிட்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 12 லட்சத்து 40ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கியுள்ளோம். 2.5 லட்சம் போலி ரேசன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன. 12 லட்சத்து 50 ஆயிரம் பெயர்கள் அவர்கள் உயிரிழந்ததையடுத்து குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் நெல்லுக்காகக் கட்டப்பட்ட செமி குடோன் தஞ்சாவூர் மாவட்டத்தில் வெறும் 10000 மெட்ரிக் டன் என்ற அளவில் தான் உள்ளது. மேலும் அங்கே சாலை வசதி இல்லாமல், பயன்பாட்டிற்கு இல்லாமல் இருந்ததை இந்த திமுக அரசு ஆறு கோடி ரூபாய் மின் இணைப்புக்கும் ஆறு கோடி ரூபாய் சாலை அமைப்பதற்கும் ஒதுக்கீடு செய்து அந்த குடோன்களை பயன்பாட்டிற்குக்கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் நெல்லை சேமித்து வைக்க எந்த இடத்திலும் புதிய குடோன்கள் அமைக்கவில்லை. திமுக ஆட்சி அமைத்த 14 மாதங்களில் பல்வேறு இடங்களில் குடோன் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் உணவுப்பொருள்கள் கொள்முதல் செய்வதற்கு திறந்தவெளி டெண்டர் மற்றும் உலகளாவிய டெண்டர் விடப்பட்டு வருகிறது. இதில் தகுதி வாய்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கு பெற்று டெண்டர்கள் எடுத்து வருகின்றன.
ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இந்த உணவுப்பொருட்கள் துறையில், விடக்கூடிய டெண்டரை பெற்று வந்தது. முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீதான ஊழல் புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கண்டிப்பாக யார் தவறு செய்தாலும் சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். கண்டிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். நீலகிரி, கிருஷ்ணகிரியில் முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் ரேசன் கடைகளில் சிறு தானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னை உள்பட பல மாவட்டங்களில் சிறு தானியங்கள் வழங்க வேண்டும் எனக்கோரிக்கை வந்துள்ளது. இதனை நிறைவேற்ற படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் செஸ் போர்டு போல் ஒரு டீக்கடை - குவியும் மக்கள்!