அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான யுத்தம் ஒவ்வொரு விவகாரங்களிலும் ஒலிக்க தொடங்கியுள்ளது. பொதுக்குழு மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஈபிஎஸ், வழக்கு நிலுவையின் காரணமாக செயல்பட முடியாத சூழல் உள்ளது.
சசிகலா, டிடிவி தினகரன் வரிசையில் ஓபிஎஸ்சையும் கட்சியில் இருந்து நீக்கியதை பாஜக ரசிக்கவில்லை. ஆனால் ஓபிஎஸ் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து, ஈபிஎஸ் அணியினர் பொதுக்குழுவில் ஓபிஎஸ்சை நீக்கினர். பாஜகவின் முடிவுகளுக்கு ஏன் அதிமுக கட்டுப்பட வேண்டும் என்பதற்கு சில காலங்கள் பின்நோக்கி செல்ல வேண்டும்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் "குஜராத்தை சேர்ந்த மோடியா அல்லது தமிழ்நாட்டை சேர்ந்த லேடியா" என்று கூறிய ஜெயலலிதாவின் கட்சி தான் அதிமுக. பாஜக கொண்டு வந்த நீட் உள்ளிட்ட அனைத்து மசோதாக்களையும் எதிர்த்து அரசியல் செய்தவர் ஜெயலலிதா. 2016ஆம் ஆண்டு 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட்டு அதிமுக வெற்றி பெற்றது.
"கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவறு" என்று உணர்ந்து கொண்டேன் என ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு அதிமுகவின் பாஜக எதிர்ப்பு என்பது தலைகீழாக மாறிவிட்டது.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓபிஎஸ் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
சில மாதங்களில் சசிகலா தரப்பின் நிர்பந்தம் காரணமாக முதலமைச்சர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். முதலமைச்சராக பதவியேற்கும் சமயத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டார். சிறைக்கு செல்லும் போது, அப்போது மூத்த அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக அறிவித்து சென்றார். அன்றில் இருந்து சசிகலா சிறை தண்டணை, ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு போன்ற விவகாரத்தில் பாஜகவின் தலையீடு இருந்ததாக கூறப்பட்டது.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக என்றும் கூறப்பட்டது. ஜெயலலிதா எதிர்த்த நீட் உள்ளிட்ட விவகாரங்களுக்கு ஈபிஎஸ் அனுமதியளித்தார். இதன் மூலம் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக கூட்டணி அமைந்தது.
இதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக, பாஜக கூட்டணி வைத்தது. இதில் அதிமுக தோல்வியை சந்தித்த போதிலும் பாஜக உடனான கூட்டணி சுமூகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தான் அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான யுத்தம் தொடங்கியது.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினர் பிரிந்த போதிலும் பாஜகவிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர். குறிப்பாக குடியரசு தலைவர் தேர்தலில் இரண்டு தரப்பும், பாஜக வேட்பாளரை தான் ஆதரித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஈபிஎஸ் சந்தித்தார். இதில் அரசியல் பேசவில்லை என ஈபிஎஸ் கூறினாலும், தான் ஒற்றை தலைமை ஆக வேண்டும் என பேசிய தகவல் வெளியாகியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டமளிப்பு விழாவிற்கு வந்த பிரதமர் மோடியை ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் வரவேற்றனர். இதில் "அனைவரும் ஒன்று சேருங்கள்" என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக தமிழகம் வந்த அமித்ஷாவை சந்திக்க ஈபிஎஸ் விருப்பம் தெரிவிக்கவில்லை.
இது குறித்து பேசிய ஈபிஎஸ், "பாஜக ஒரு தேசிய கட்சி, நாங்கள் எதிர்க்கட்சி. பாஜக என்பது கட்சி, அதிமுக என்பது வேறு கட்சி. நான் அமித்ஷாவை சந்திக்காததை ஏன் இவ்வளவு விவாதம் செய்ய வேண்டும்" என கூறினார்.
ஆரம்ப கட்டம் முதல் பாஜகவின் எண்ணம் ஒருங்கிணைந்த அதிமுக, ஆனால் அதை இன்று வரை ஈபிஎஸ் ஏற்க மறுத்துவிட்டார். எடப்பாடி பழனிச்சாமியை சுற்றி பல வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவரது பேச்சுவார்த்தைகளில் பாஜகவின் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கிறார் என கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, "எடப்பாடி பழனிச்சாமியை நம்புவதற்கு பாஜக தயாராக இல்லை. ஈபிஎஸ்சிற்கு 2024 நாடாளுமன்ற தேர்தலை விட, 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து, முதல்வர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்பது தான் முக்கியம்.
இதை புரிந்து கொண்ட பாஜக, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக செயல்பட தயக்கம் காட்டுகிறது. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் ஈபிஎஸ் தனது திட்டத்தை மாற்ற முயற்சி செய்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுகவை வெளியேற்ற போகிறார்.
பின்னர் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இரட்டை இலை முடங்கினாலும் தனித்தே களம் காணும் முடிவுக்கு ஈபிஎஸ் வந்துள்ளார். இதனால் அதிமுக, பாஜக கூட்டணிக்குள் விரிசல் வருவதற்கு வாய்ப்புள்ளது" என கூறினார்.
பாஜகவை எதிர்த்து அரசியல் செய்ய ஈபிஎஸ் தயார் ஆவதாக கூறப்படுகிறது. அப்படி பாஜகவை எதிர்த்தால் அதற்கான பின் விளைவுகளை ஈபிஎஸ் சமாளிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதில் தீர்ப்பு ஈபிஎஸ்க்கு சாதகமாக வரும் என்று அவரது தரப்பு முழுமையாக நம்புகின்றனர். அதற்கு அடுத்த கட்டமாக ஜனவரி 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் பொதுக்குழுவை கூட்டி நிரந்தர பொதுச்செயலாளர் ஆவதற்கான திட்டத்தையும் செயல்படுத்த உள்ளார்.
மேலும் மாவட்ட வாரியாக மாநாடு நடத்தவும் ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளார். ஈபிஎஸ்சால் பாஜகவை எதிர்த்து திட்டங்களை செயல்படுத்த முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் - ஓபிஎஸ் அறிவிப்பு