துன்பத்தில் துவண்டு கிடக்கும் மக்கள் அதிலிருந்து தங்களை மீட்டெடுக்கும் தலைவரை காலங்காலமாக தேடுவது தொடர்கதைதான். தமிழ்நாடு அரசியல் சூழலும் இதற்கு விதிவிலக்கானதல்ல. அத்தகைய ஒரு தலைவராக அரியணையேற தமிழ்நாடு முதலமைச்சரும், அஇஅதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார்.
பச்சைத் துண்டு தலைப்பாகை, மடித்துக்கட்டிய வேட்டி எனப் புயல் மழையால் கடும் பாதிப்பைச் சந்தித்த வேளாம் நிலங்களின் சேற்றில் இறங்கி வேளாண்குடி மக்களின் கோரிக்கையை கேட்டு அறிகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
கடலூரிலிருந்து தொடங்கி நாகப்பட்டினம் வரை உள்ள காவிரி டெல்டா வேளாண்மை பெருநிலப்பரப்பில் நிவர், புரெவி புயல்களால் கடும் பாதிப்பை ஏற்படுத்திய பகுதிகளுக்கு நேரடியாக களத்திற்குச் சென்று முதலமைச்சரே ஆய்வுசெய்தார்.
அமைச்சர்கள் புடைசூழ, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிகளிலும் அலுவலர்கள் பட்டாளத்தோடு விரைந்து கள ஆய்வு மேற்கொண்டு, சேதாரங்களின் விவரங்களைச் சேகரித்தார். சேறும் சகதியுமான வயல்வெளிகளில் சிறிதும் தயக்கமுமின்றி இறங்கி, அழுகிய பயிர்களைக் கையில் எடுத்து ஆராய்ந்தார். இவை எல்லாம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதை மறுக்க முடியாது தான்.
அதே நேரத்தில், 'நான் ஒரு விவசாயி' எனத் தன்னைப் பெருமையோடு பறைசாற்றிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2021 தேர்தல் திருவிழாவில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
2018ஆம் ஆண்டு தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளைத் தலைகீழாகப் புரட்டிப்போட்ட கஜா புயலுக்கு முன்னரும், பின்னரும் இத்தகைய நேரடிக் கள ஆய்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டதில்லை.
கஜா புயலானது, தஞ்சை - திருவாரூர் - நாகை உள்ளிட்ட ஒட்டுமொத்தமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் அனைத்தையும் தாக்கி, பேரழிவை விதைத்துவிட்டுச் சென்றது. அதன் வடுக்கள் இன்னும் அங்கு காணப்படுகிறது.
அதிலிருந்து பாடம் கற்ற ஈபிஎஸ்ஸின் தற்போதைய மாற்றம் நடவடிக்கை முந்தைய பயணத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. அந்த மாற்றம்தான் எதிர்க்கட்சிகளைப் புருவம் உயர்த்தவைத்துள்ளது.
விவசாயி என்னும் நான்!
திமுகவின் தற்போதைய நகரத்தன்மையுடைய தலைமைக்கு எதிரான பின்தங்கிய கிராமப்புறத்திலிருந்து அரசியலில் நிலைப்பெற்ற ஒருவராகத் தன்னை எடப்பாடி பழனிசாமி வேறுபடுத்திக் காட்டினார். 'நான் ஒரு விவசாயி' என்றும் பெருமையோடு கூறிக்கொள்ளும் அவர், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து வரலாற்றுச் சிறப்புமிக்க செயலை செய்துகாட்டி தன்னை வேளாண்குடி பாதுகாவலனாகப் பறைசாற்றிக்கொண்டார்.
அறுவடைக்குத் தயாரான நெல் பயிரை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, மறு கையில் கதிர் அரிவாளோடு அவர் நெல்லறுத்த காட்சியே இதற்குச் சாட்சி என்று கூறலாம்.
“அடிப்படையில் நான் ஒரு விவசாயி. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும்? ஸ்டாலின்” என்ற எடப்பாடி பழனிசாமி, 'பதநீர் டேஸ்டாக இருக்கிறதே, இதில் சர்க்கரை ஏதும் போட்டீர்களா' என்று ஸ்டாலின் பதநீர் கொடுத்தவர்களிடம் கேட்டதைச் சுட்டிக்காட்டினார்.
"எடப்பாடி பழனிசாமி தன்னை அவரது இயல்பிலேயே வெளிப்படுத்துகிறார். தான் ஒரு விவசாயி என்று திட்டமிட்டு காட்சிப்படுத்த வேண்டிய அவசியம் முதலமைச்சருக்கு இல்லை. விவசாய குடும்பத்திலிருந்து வந்த அவர் மற்ற தலைவர்களைப் போலல்லாமல் தனது வேர்களைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
விவசாயிகளின் நிலைமைகளை மேம்படுத்த அதிமுக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது நிச்சயமாக விவசாயிகளின் வாக்கு வங்கியாக மாறும். புயல் மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்குச் சென்ற முதலமைச்சரின் பயணத்தைத் தேர்தல் ஆதாயத் தேடலாக பார்க்கக்கூடாது” என அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் சிவசங்கரி கூறுகிறார்.
ஆனால், முன்னெப்போதுமில்லாத வகையில் விவசாயிகளின் எழுச்சிப் போராட்டத்தை ஒட்டுமொத்த நாடும் கண்டுவருகிறது. இந்நேரத்தில், மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களின் சாதகமான அம்சங்களைச் சுட்டிக்காட்டி அதிமுக அரசு ஆதரிக்கிறது.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராட்டம் நடத்த தடைவிதிப்பது, விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுவந்த இலவச மின்சாரத்தை நிறுத்தியுள்ளது அதிமுக அரசின் தவறான செயல். ஜனநாயக நாட்டில் சரியான காரணத்திற்காக போராட்டம் நடத்த தடைவிதிப்பது ஏற்புடையதல்ல.
ஆயிரக்கணக்கான வேளாண் நிலத்தைக் கையகப்படுத்தி பாரத் மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை முதல் சேலம் வரை எட்டுவழி பசுமை சாலை அமைக்க அதிமுக அரசு தீவிரமாக முயல்கிறது.
அதேநேரத்தில், விவசாய நிலத்தின் வழியாக எரிவாயு குழாய்களை புதைப்பது மற்றும் மின்சார கோபுரங்களை அமைப்பது போன்ற திட்டங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் மாநில அரசு ஆதரவு அளிப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களையும் அதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு எதிர்கொண்டுள்ளது.
இவற்றை எல்லாம் மீறியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு விவசாயியாகவும், விவசாயிகளின் தோழனாகவும் முன்னிறுத்திக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்.
இவை ஊடக விளம்பரத்திற்கு உதவக்கூடும் என்றாலும், தேர்தலில் வெற்றிபெற போதுமானதாக இருக்காது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது குறித்து ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் ஆர். திருநாவுக்கரசு கூறுகையில், "தொலைக்காட்சி கேமராக்களுக்கு போஸ் கொடுப்பது, வார்த்தைக்கு வார்த்தை தன்னை விவசாயி என அடையாளப்படுத்துவது வாக்குகளைப் பெற உதவாது.
அதிமுக வாக்காளர்களில் ஒரு பகுதியினர் கொள்கையைப் பொருட்படுத்தாமல் அக்கட்சிக்கு வாக்களிப்பார்கள். அது அவர்களுக்கு எப்போதும் போல கைக்கொடுக்கலாம். அனைத்து கட்சிகளும் இத்தகைய அரசியல் செயல்பாடுகளால், பாமர மக்களை கவர முயற்சிக்கின்றன.
ஆனால், அது எல்லா நேரங்களிலும் வெற்றிபெறுவதில்லை. குறிப்பாக, டெல்டா பிராந்தியத்தில் சிபிஐ, சிபிஎம் ஒரு வலுவான தளத்தையும், பலத்தையும் கொண்டுள்ளது.
திமுக-சிபிஐ-சிபிஎம்-காங்கிரஸ் கூட்டணிக்கு இப்பகுதியில் வலுவான ஆதரவு உள்ளது. அஇஅதிமுகவுக்கு அங்கு செல்வாக்கு இல்லை.
இந்த வகையான புகைப்பட அமர்வுகளை மட்டுமே வைத்துக்கொண்டு அவர்களால் தேர்தலை எதிர்கொள்ள முடியாது. அது அவர்களுக்கு உதவாது. ஏனெனில், இதுபோன்ற புகைப்படங்களுக்காக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் ” என்கிறார்.
அரசுக்கு எதிராகவும் ஆதரவாகவும் விமர்சனங்கள் பல எழுந்தாலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் யார் அரியணையில் அமர வேண்டும் என முடிவெடுப்பது பொதுமக்களும், பெரும்பான்மையாக உள்ள விவசாயிகளும்தான். பொருத்திருந்து பார்க்கலாம் எடப்பாடியின் இமேஜ் உடையுமா, பிரகாசமாக ஒளிருமா என்று!
இதையும் படிங்க: 'மாற்று பாலினத்தவர் குறித்த மனோபாவம் மாறவேண்டும்'- ரவிக்குமார் எம்.பி