சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து கூறி வருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று (அக்.6) விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யபடவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானம் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: கருணாநிதியின் பேனா நினைவு சின்னம்:மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!