இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமில்லாமல், திரையரங்குகள், மால்கள், கேளிக்கை விடுதிகள் என அனைத்தையும் மூட அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் இதே வழிமுறையை முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையாண்டிருக்கிறார்.
இந்தச் சூழலில் தலைமைச் செயலர் சண்முகம் அனைத்துத் துறைச் செயலர்களுக்கும் ஒரு அவசர கடிதம் அனுப்பியிருந்தார். அதில், ”தலைமைச் செயலகத்துக்கு வரும் அலுவலர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கரோனா வைரஸ் சோதனையான தெர்மல் ஸ்கிரீனிங் செய்த பிறகே அனுமதிக்கப்படுவர். மிக முக்கிய விஷயம் தவிர மற்ற நேரங்களில் துறைத் தலைவர்களைத் செயலகத்துக்கு வரவைத்து கூட்டம் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
இருமல், காய்ச்சல், சளி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகள் தென்படும் பணியாளர்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்த வேண்டும். மேலும் தேவையான மருத்துவச் சிகிச்சையை எடுக்க அறிவுறுத்த வேண்டும். பணியாளர்கள் அடிக்கடி சோப்பினால் 20 வினாடிகள் கைகளைக் கழுவ வேண்டும். மேலும் சுடுதண்ணீரையே குடிக்க அறிவுறுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: தியேட்டர், பார், மால் அனைத்தையும் மூட அதிரடி உத்தரவு!