நாடு முழுவதும் கரோனா வைரஸ் (தீநுண்மி) அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு கரோனா தொற்று பரவாமல் தடுக்க காவல் துறையினர் களப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைத் தெரிவித்தார்.
இதில், காவலர்கள் 45 நாள்களுக்கு மேலாக ஓய்வு, விடுப்பில்லாமல் தொடர்ந்து பணியாற்றிவருகின்றனர். மேலும், இவர்களுக்கு உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளை சரியான முறையில் செய்யாத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, இப்போது மதுவிற்று வருமானம் பார்க்க அவர்களை டாஸ்மாக் கடை வாசல்களிலும் நிறுத்தியிருக்கிறது.
இதில் "பெண் காவலர்களின் நிலைமையோ மிகுந்த வேதனை அளிக்கிறது. 'காவல்துறையினர் ரோபோக்கள் அல்லர்; அவர்களும் மனிதர்களே' என்பதை உணர்ந்து, கடுமையான பணிச்சுமையிலும், மன அழுத்தத்திலும் இருக்கும் அவர்களுக்கு மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போன்ற ஓய்வு உள்ளிட்ட வசதிகள் கிடைக்கவும், தேவைப்படுவோருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கிடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மேலும் காவல் துறையில் உள்ள 55 வயதிற்கு மேற்பட்டோருக்கும், உடல் நலப்பிரச்னைகள் இருப்பவருக்கும் சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
மாநிலம் முழுவதும் காவல் துறையினருக்கு அடுத்தடுத்து கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுவரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பு குறித்தும் அரசு அக்கறை காட்ட வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குடும்பத்தை பிரிந்து களப்பணியாற்றும் பெண் காவலர்கள் வீடியோ காட்சி