சென்னை:பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 1 லட்சத்து 650 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர அனுமதி அளிக்கப்பட்டதில், 22 ந் தேதி வரையில் 88 ஆயிரத்து 843 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டைவிட கூடுதலாக 12 ஆயிரத்து 54 மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் பிஇ, பிடெக் படிப்பில் சேர்வதற்கு 446 கல்லூரியில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 996 இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்கியது. அதில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழுவின் மூலம் சிறப்பு, பொதுக்கலந்தாய்வு,துணைக்கலந்தாய்விற்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 278 இடங்கள் அனுமதிக்கபட்டன. அவற்றில் 1 லட்சத்து 650 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
53 ஆயிரத்து 628 இடங்கள் காலியாக உள்ளது. 22 ந் தேதி வரையில் 88 ஆயிரத்து 843 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 11 ஆயிரத்து 807 மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டி உள்ளது.பொதுப்பிரிவினருக்கு நடத்தப்பட்ட சிறப்பு பிரிவு கலந்தாய்வின் மூலம் 610 மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளித்தாலும், 377 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பொதுக்கலந்தாய்வில் 84 ஆயிரத்து 202 ஒதுக்கீடு வழங்கப்பட்டதில், 80 ஆயிரத்து 95 மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். துணைக்கலந்தாய்வில் 6426 மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு 81 ஆயிரத்து 390 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நடத்தப்பட்ட சிறப்பு பிரிவு கலந்தாய்வின் மூலம் 58 மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளித்தாலும்,58 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
பொதுக்கலந்தாய்வில் 14 ஆயிரத்து 59 ஒதுக்கீடு வழங்கப்பட்டதில், 8 ஆயிரத்து 701 மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். துணைக்கலந்தாய்வில் 653 மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 7206 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. பொறியியல் படிப்பில் கடந்த ஆண்டை விட 12 ஆயிரத்து 54 மாணவர்களுக்கு கூடுதலாக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குளுகுளு சென்னை: அதிகளவிலான பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி