சென்னை: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் லாட்டரி விற்பனையில் மார்ட்டின் என்கிற கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் முக்கிய நபராக இருந்து வருகிறார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்து. கடந்த 2009 - 2010 காலக்கட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்திருப்பதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது.
அதனடிப்படையில் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்கு மார்ட்டின் மற்றும் அவரது பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, பல்வேறு கட்டங்களாக லாட்டரி அதிபர் நடத்தி வரும் நிறுவனங்கள், அவருக்கு சொந்தமான கட்டடங்கள், வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை படிப்படியாக முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுவரை மொத்தம் 451.07 கோடி மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த நிலையில் மீண்டும் கொச்சின் அமலாக்கத்துறை லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மகன் மற்றும் மருமகன் ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சென்னை போயஸ் கார்டன் பகுதியில் கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ள மார்ட்டினின் வீடு, மருமகன் ஆதவ் அர்ஜுனின் அலுவலகம் உட்பட 3 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை ஏழு பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீசாருடன் வந்து சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு குறித்து விவரங்கள் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.