சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் கைதானதால் வழக்கு ஆவணங்கள் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு விசாரணையை செப் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக சென்னை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை நுங்கம்பாக்கம், முகப்பேர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நுங்கம்பாக்கம் ஜெகநாதன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து பேர் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர் செல்போனில் குறிப்பிட்ட நபரின் புகைப்படத்தை காட்டி இந்த பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் இந்த நபர் வசிக்கிறாரா என குடியிருப்பு வாசிகளிடம் விசாரித்து வருகின்றனர்.
எப்போதும் சோதனைக்கு முன் அமலாக்கத்துறை அதிகாரிகள் முகவரியை உறுதி செய்த பின்பே நேரடியாக வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது நுங்கம்பாக்கம் பகுதியில் குறிப்பிட்ட நபரின் புகைப்படத்தை குடியிருப்பு வாசிகளிடம் காட்டி எந்த பகுதியில் இவர் வசித்து வருகிறார் என விசாரணை செய்து வருகின்றனர்.
சுமார் மூன்று மணி நேரமாக குறிப்பிட்ட நபரின் புகைப்படத்தை காட்டி நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் உள்ள குடியிருப்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நபர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியா அல்லது தொழில் அதிபரா, மணல் குவாரி உரிமையாளரா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறை வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிரடி உத்தரவு பிறப்பித்த பள்ளிக்கல்வித்துறை!