சென்னை: கடந்த 2009 - 2010 காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்ததாகவும் லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியது.
அதன் அடிப்படையில் கேரள மாநிலம், கொச்சி அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின்கீழ் மார்ட்டின் மற்றும் அவரது பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. மேலும், இது தொடர்பாக லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பல்வேறு கட்டங்களாக, லாட்டரி அதிபர் மார்ட்டின் நடத்தி வரும் நிறுவனங்கள், அவருக்குச் சொந்தமான கட்டடங்கள், வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை படிப்படியாக முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது. மேலும், மார்ட்டினுக்கு தொடர்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கொச்சின் அமலாக்கத்துறை லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மகன் மற்றும் மருமகன் ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த மே மாதம் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் முடிவில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், லாட்டரி அதிபர் மார்டனுக்கு சொந்தமான வீடு, கல்லூரி உள்ளிட்ட மூன்று இடங்களில் இன்று காலை முதல் (அக்.12) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மே மாதம் மார்ட்டனுக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
கோயம்புத்தூர் துடியலூர் அருகே வெள்ளை கிணறு பகுதியில் உள்ள மார்ட்டின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய அலுவலகங்களில் சோதனை நடைப்பெற்று வரும் நிலையில், சோதனையின் தொடர்ச்சியாக சென்னையில் அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனுக்கு தொடர்புடைய இடத்திலும் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக ஆதவ் அர்ஜுன் இருந்து வதுகிறார். சென்னை போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் ஆதவ் அர்ஜூனுடைய வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையில், அவரது வீட்டில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனுக்கு நிபந்தனை முன்ஜாமீன்!