சென்னை: தமிழ்நாட்டின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான வீடு மற்றும் சகோதரர் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மூன்று இடங்களிலும், கரூரில் நான்கு இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய சென்னை, கோயம்புத்தூர், கரூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் சட்ட விரோதமாகப் பணம் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாகக் கிடைக்கப் பெற்ற ஆவணத்தின் அடிப்படையில், இன்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி இல்லம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாஜகவின் பிடியிலிருந்து அதிமுகவால் விலக முடியாது - ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேச்சு
சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லம், அபிராமிபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக் இல்லம், அதே போல் அதே பகுதியில் உள்ள ஸ்ரீபதி எண்டர்பிரைசஸ் உரிமையாளர் கோகுல் இல்லம் ஆகிய மூன்று இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லம் மற்றும் கோகுல் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் அபிராமிபுரம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜி இளைய சகோதரர் அசோக்கின் அடுக்குமாடி குடியிருப்பில் காலை 7:00 மணிக்கு சோதனைக்குச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளை உள்ளே அனுமதிக்காததால் அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்திலே அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 மணி நேரமாக காத்துக் கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் இல்லத்தின் கதவு உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்ததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே காத்துக் கொண்டிருந்துள்ளனர். நான்குக்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடம் பகுதியில் காத்துக் கொண்டிருந்ததாகவும், பின்னர் மத்திய ரிசர்வ் படை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்குச் சென்ற போது, அவரின் ஆதரவாளர்கள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சோதனைக்கு வந்த அதிகாரிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது சோதனைக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளை, கதவைத் திறக்காமல் வெளியில் காத்திருக்க வைத்திருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் தலைத்தூக்கிய அதிமுக - பாஜக மோதல்.. கூட்டணியை முறிக்க திட்டமா?