சென்னை: செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்தையினர் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில், கீழமை நீதிமன்றத்தை நாடலாம் எனவும் அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 3வது முறையாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்: அமைச்சர் சிவசங்கர் மீண்டும் பேச்சுவார்த்தை!
இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று (ஜன.8) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமலாகத்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வருவதற்காக விசாரணையை சிறிது நேரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது கோபமடைந்த நீதிபதி, "ஏற்கனவே இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இதுவரை தாக்கல் செய்யவில்லை.
பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் எதற்காக வழக்கு தொடருகிறீர்கள்?" என்று அமலாகத்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கின் விசாரணை சிறிது நேரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், செந்தில் பாலாஜி மீது வழக்கு விசாரணைத் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்கக் கூடாது, ஜாமீன் வழங்கினால் விசாரணையை பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை நாளை (ஜன.9) நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: "பொங்கல் பரிசுத் தொகுப்பில் நெட்டி மாலையைச் சேர்க்க வேண்டும்" - தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!