கரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களின் வீடுகளில் சென்னை மாநகராட்சி அலுவலர்களின் அறிவுறுத்தலின்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்தன. அவ்வாறு கடந்த 28ஆம் தேதி உயர் அலுவலர்கள் உத்தரவின் படி, ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல் ஹாசனுக்கு சொந்தமான அலுவலகத்தில் வினோத்குமார் என்பவர் போஸ்டரை ஒட்டினார்.
இதனையடுத்து அந்தச் சம்பவம் பூதாகரமாக வெடித்தது. தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்சையில் அலுவலர்கள் முன்னிலையில் அந்த போஸ்டர் அகற்றப்பட்டது. பின்னர் இந்த சர்ச்சை தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கமளித்தார்.
போஸ்டரை ஒட்டிய வினோத்குமார் சென்னை ஆர்.ஏ.புரத்தில் மாநகராட்சியில் தற்காலிக (மலேரியா) பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, போஸ்டர் ஒட்டியது குறித்து மாநகராட்சி அலுவலர்களால் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்பு வினோத்குமார் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
![கமல் வீட்டில் போஸ்டர் ஒட்டியது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-07-exclusive-story-of-corporation-employee-suspended-who-was-applied-covid19-poster-in-actor-kamal-office-7204894_10042020181624_1004f_1586522784_711.jpg)
இது தொடர்பாக வினோத்குமார் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், "எனக்கு ஆங்கிலம் தெரியாது, அலுவலர்கள் சொல்வதை மட்டுமே செய்தேன். ஒட்டச் சொன்னார்கள் ஒட்டினேன். எடுக்கச் சொன்னார்கள் எடுத்தேன். இதற்காக நான் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன். தற்போது என் இரண்டு குழந்தைகளுடன் வேலையின்றி தவிக்கிறேன்.
மேலும் இந்த விவகாரம் மாநகராட்சி ஆணையர் கவனத்திற்கு கொண்டு செல்லவும் அலுவலர்கள் தடுப்பதால் ஏதும் அறியாத கடைநிலை ஊழியரான நான் இப்பிரச்னையில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன். உண்மை நிலையை ஆராய்ந்து எனக்கு மீண்டும் பணியை வழங்க ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை' இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: நாடோடி மக்களுக்கு கிடைத்த அரசின் உதவிக்கரம்!