பிரபல எழுத்தாளர் கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (99), வயது மூப்பால் நேற்றிரவு 11 மணியளவில், புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
லாஸ்பேட்டை அரசுக் குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்படும் இவரின் உடல், இன்று (மே.18) மாலை கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922ஆம் ஆண்டு பிறந்த இவர், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். முதலில் விவசாயம் செய்து வந்த இவர், பின்னர் எழுத்தாளராக மாறினார்.
இவரின் மனைவி கணவதி அம்மாள், கடந்த 2019இல் தான் வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு திவாகர், பிரபாகர் என இரு மகன்கள் உள்ளனர்.
நாவல், குறுநாவல், கிராமிய கதைகள் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் வல்லவராக விளங்கிய இவருக்கு, சாகித்ய அகாடமி விருது, தமிழக அரசின் விருது, கனடா நாட்டின் விருது உள்ளி்ட்ட பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளது. இவர் கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படுகிறார்.
இவரது படைப்புகளில் கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், கதவு ஆகியவை மிகவும் புகழ்பெற்றது. கரிசல் கதைகள், கொத்தைப்பருத்தி உள்ளிட்டவை கி.ரா.வின் மற்ற முக்கிய படைப்புகளாகும்.
கதை சொல்வதற்கும், எழுதுவதற்கும் வயது ஒரு தடை இல்லை என்பதை உணர்த்தும் விதமாக, கடந்த மாதம் கூட ‘மிச்சக் கதைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பை அவர் எழுதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.