சென்னை: மின்சார வாரிய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற துறை ரீதியான ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால், கடன் எதுவும் வழங்கக்கூடாது என மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் ஏற்கெனவே கடும் கடன் சுமையில் உள்ள மின்சார வாரியம், மேலும் சிரமத்தை சந்திக்கும்.
முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் தேவையில்லை எனில், அந்த மானியத்தை வாடிக்கையாளர்கள் விட்டுக்கொடுக்கலாம். இருப்பினும், 100 யூனிட் மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை. திமுக தேர்தல் வாக்குறுதி எண் 222இன் படி, வீட்டு மின் நுகர்வோர்களுக்கு இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
யூனிட் அளவில் மாற்றம்: குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதலியவற்றிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். 200 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 காசுகள் கூடுதலாக செலுத்தும் வகையில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், 300 யூனிட் - ரூ.72.50, 400 யூனிட் - 147.50, 500 யூனிட் - ரூ.297.50, 600 யூனிட் - ரூ.155, 700 யூனிட் - ரூ.275, 800 யூனிட் - ரூ.395, 900 யூனிட் - ரூ.565 வரையிலும் மின் கட்டணம் உயர்கிறது. மேலும் சிறு மற்றும் குறு தொழில்களுக்கு ஒரு யூனிட்டிற்கு 50 காசுகள் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்களில் மாற்றம்: 53% வணிக மின் பயன்பாட்டாளர்களுக்கு மாதம் 50 ரூபாய் உயர்கிறது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.1 ம், விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சார விநியோகம் தவிர, அடுத்த ஒரு யூனிட்டுக்கு 70 பைசாவும், LT தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.1.15 காசுகளும் உயர்கிறது.
உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 40 காசுகள், ரயில்வே மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு 65 காசுகள், உயரழுத்த வணிகத்திற்கு 50 காசுகளும் உயர உள்ளது. ஒரு நாளின் நேர மின் கட்டண விகிதம் (TOD) காலை 6.30 முதல் 10.30 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் 10 மணி வரையிலும் மாற்றப்பட இருக்கிறது.
இந்த மின் கட்டண உயர்வு என்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வராத வகையில் உயர்த்தவே உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே 42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு