நிவர் புயலால் பெய்த மழையின் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீர் தேங்கி பகுதியில் உள்ள மின்சாரம் வழங்கும் பீடர்கள் நிறுத்தப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன. மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை மேற்கொண்டது. மேலும் நிவர் புயலுக்கு அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மழை நீர் குறைந்த பகுதிகளில் மின் விநியோகம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது,”சென்னையில் மக்களின் பாதுகாப்பு கருதி 390 இடங்களில் மின் இணைப்பு வழங்கும் பீடர்கள் தண்ணீர் தேங்கி உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் வடிய வடிய இன்று மாலைக்குள் முழுவதுமாக மின்சாரம் அளிக்கப்படும்.
பிற மாவட்டங்களில் மின்சார கம்பங்கள் விழுந்துள்ளது குறித்து மின் துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். அதனை உடனடியாக சரி செய்யவும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். நிவர் புயலால் பெரிய அளவில் மின்சார பாதிப்பு எதுவும் இல்லை. பிற மாவட்டங்களில் உள்ள சூழ்நிலைக்கேற்ப ஆய்வு செய்து உடனடியாக மின் விநியோகம் வழங்கப்படும்” என்ரார்.