சென்னையில் கரோனா பரவல் காரணமாக ஜூன் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இந்த நான்கு மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து தமிழ்நாடு மின் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “கரோனா வைரஸ் தொற்று பரவுவதால் கடந்த மார்ச் மாதம் நள்ளிரவு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது தமிழ்நாடு அரசு ஊரடங்கை மேலும் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை சில அத்தியாவசிய பணிகள் நீங்களாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள மின் நுகர்வோர்களுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி, அந்தப் பகுதிகளில் உள்ளோர் மின் கட்டணத்தை ஜூலை 15ஆம் தேதி வரை தாமதக் கட்டணம், மின் இணைப்பு கட்டணம் இல்லாமல் செலுத்தலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும், ஜூலை 15ஆம் தேதி வரை மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டாமென்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கு அதற்கு முந்தைய மாத மின் கணக்கீடு பட்டியல்படி மின்கட்டணம் கணக்கிடப்படும். அதாவது தாழ்வழுத்த நுகர்வோர்களுக்கு பிப்ரவரி 2020 மற்றும் மே 2020 ஆகிய மாதங்களில் செலுத்திய தொகையை ஜூன் 2020 மாத மின்கட்டணமாக கணக்கிடப்படும்.
அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய அனைத்து உயர் அழுத்த நுகர்வோர்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு மின்சார வாரியம் தனது மின் இணைப்பிற்கான உரிமையை விட்டுக் கொடுத்ததினால் பிப்ரவரி 2020, மார்ச் 2020, ஏப்ரல் 2020 மற்றும் மே 2020 மாதத்திற்கான மின் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பின், அந்த உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் தங்களது கட்டணத்தை ஜூலை 15ஆம் தேதிக்குள் செலுத்தலாம்.
அதுவரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் மின் துண்டிப்பு செய்யப்படாது. குறிப்பாக, உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை மின் கட்டண அலுவலகங்கள் செயல்படாததால் இணையதள வழிமுறையைப் பயன்படுத்தி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட திமுகவினருக்கு உயர் நீதிமன்றம் ஜாமின்