சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1.30 மணியளவில் கடற்கரைக்கு புறப்பட்டுச் சென்ற மின்சார ரயில் நடைமடை இரண்டிலிருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் மின்சார ரயிலில் மின்சாரத்தை உள்வாங்கும் (பேண்டா) என்னும் கருவி எதிர்பாராத விதமாக மின்சார கம்பியில் சிக்கி உடைந்தது.
ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்க்கு மாறும்போது விபத்து ஏற்பட்டதால் ரயில் இயங்காமல் தண்டவாளத்திலேயே நின்றது. இதனால், சுமார் ஒரு மணி நேரமாக மற்ற மின்சார ரயில்கள் தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்ல முடியாமலும், கடற்கரையில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களும் ஆங்காங்கே தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மேலும், மின்சார ரயிலில் சென்ற பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்றனர். இதற்கு இடையே அதற்குப் பின்னால் வந்த சென்னை கடற்கரை - தாம்பரம்- செங்கல்பட்டு- அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் எட்டாவது பிளாட்பாரத்திற்கு இயக்கப்பட்டது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் ரயிலில் பொருத்தப்பட்டிருக்கும் பேண்டா கருவி பழுதானதால் தான் கம்பியில் சிக்கி உடைந்திருக்கும் என தெரிவித்தனர். பின்னர், மின்சார ரயிலை பின்னோக்கி இயக்கி கொண்டு சென்றபோது சரி செய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வழக்கம் போல் மின்சார ரயில் இயங்குகின்றன.
இதையும் படிங்க: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழப்பு - மிதமான மழைக்கு வாய்ப்பு