உலகத் தரத்தில் அனைத்து மின்சாரப் பொருட்களும் ஓர் இடத்தில், மின்சாதனப் பொருட்காட்சியை மின் துறை அமைச்சர் தங்கமணி திறந்துவைத்தார். இப்பொருட்காட்சி சென்னை, ராயப்பேட்டையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. 16ஆம் தேதி தொடங்கிய பொருட்காட்சி 18ஆம் தேதி வரை நடைபெறும்.
அனைத்து வகையான மின்சாதனப் பொருட்களும் உலகளவிலான தரத்தில் பொதுமக்கள் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி கூறியதாவது, "நீலகிரி மாவட்டத்தில் பணிகள் விரைந்து நடைபெற்றுவருகிறது. மின்வாரிய ஊழியர்கள் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
முதலமைச்சரின் உத்தரவுப்படி வரும் செவ்வாய்க்கிழமை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. பணிகள் வேகமாக நடந்துவருகிறது" என்று கூறினார்.
மேலும் முதலமைச்சர் நேரடியாக செல்லாதது குறித்த கேள்விக்கு, மழை தொடங்கியவுடன் வருவாய்த் துறை அமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் அங்கு சென்று ஆய்வு நடத்திவந்தனர் என்றார். மேலும், அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும் குறிப்பிட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் முதல்கட்டமாக ரூ. 20 முதல் 30 கோடி வரை மின் துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று கூறிய அவர், நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட பின்தான் முழுமையான தகவல் அளிக்கப்படும் என்றார்.