சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் கணேஷ் .
திருவொற்றியூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று மாலை (மார்ச்.29) பணி முடித்துவிட்டு இவர் வழக்கம் போல் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருவொற்றியூர் மணலி மாதவரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவருடைய இரு சக்கர வாகனத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான மாறுபட்ட சத்தம் வருவதைக் கண்டு வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது அவருடைய வாகனத்தில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. பின்னர் இருசக்கர பேட்டரி வாகனம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் செய்வது அறியாமல் சற்று நேரம் திகைத்து நிற்க அதற்குள் வாகனம் முற்றிலுமாக எரிந்து நாசமாகி விட்டது.
அப்போது அந்த வழியாக சென்ற குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான தண்ணீர் லாரியை நிறுத்தி எரிந்து கொண்டிருந்த அந்த இரு சக்கர வாகனத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இதுதொடர்பாக மாதவரம் பால்பண்ணை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். முன்னதாக, வேலூரில் (மார்ச் 26) எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் சார்ஜில் இருந்த போது திடீரென வெடித்ததால் வீட்டிலிருந்த மற்ற இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்த விபத்தில் சிக்கி தந்தை- மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதேபோல, திருவள்ளூரில் எலக்ட்ரிக் பைக்கில் பற்றிய தீ வீடு முழுக்கப் பரவியது. இதில் ஏசி உள்ளிட்ட மின் உபயோக பொருள்கள் தீயில் கருகி நாசமானது. இதேபோல் தொடரும் சம்பவங்களால் எலக்ட்ரிக் பைக் பயன்படுத்தி வருபவர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் நிறுவனங்கள் வாகனங்களை மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். இதையும் படிங்க: அமைச்சா் துரைமுருகனின் துபாய் பயணம் ரத்தானது ஏன்... காரணம் என்ன?