தேர்தலும் கட்டுப்பாடுகளும்
வாகன அணிவகுப்பு, சாலையோரம் கட்சிக் கொடிகள், தோரணம், கட் அவுட், சுவர் விளம்பரம், வேட்பாளர்களை வரவேற்க ஆரத்தி தட்டுகளுடன் பெண்கள், ஒலிபெருக்கியில் கட்சி தலைவர்களின் புகழ்பாடும் பாடல்கள், போடுங்க அம்மா ஓட்டு கோஷம்.. .. இப்படி ஒரு காலத்தில் களைகட்டியது தேர்தல் களம். மேலே உள்ள காட்சிகளை கண்டாலே தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது என அறிந்துகொள்ளலாம்.
தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இந்திய தேர்தல் ஆணையம் விதித்த கடும் கட்டுப்பாடுகளால் தற்போது அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுகிறது.
வேட்பாளர்களுடன் செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு, வேட்பாளர்களின் செலவு கணக்கு, தொகுதிகளை கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள், பறக்கும் படை என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தேர்தல் நடைபெறும் இடங்களில் தீவிர வாகன சோதனை, அதன் மூலம் கணக்கில் வராத பணம் கைப்பற்றுதல் என ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் அறிக்கை
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், முதல்கட்ட வாக்குப்பதிவு நாளின்போது குறிப்பிட்ட அரசியல் கட்சி, தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அது வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வாக்குப்பதிவு தொடங்கும் 48 மணி நேரத்திற்குள் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
சமூக வலைதளம்
இதேபோல் 17ஆவது நாடாளுமன்ற தேர்தலின்போது, வேட்பாளர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த சில நெறிமுறைகளை வகுத்தது. அதன்படி வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது வேட்பாளர்கள் தங்களுடைய பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள் குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
அரசியல் சார்ந்த விளம்பரங்களைப் பதிவிட முறையான அனுமதி பெற வேண்டும், சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வதற்கு செலவிடப்படும் தொகையையும் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும் என தொடர்ந்து கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகிறது தேர்தல் ஆணையம்.
ஓட்டுக்கு பணமும், பரிசுப் பொருள்களும்
ஆனால் எதற்கும் சளைக்காத அரசியல்வாதிகள் டோக்கன், பரிசு பொருள்கள், செல்போன் ரீ சார்ஜ் என ஓட்டுக்கு பணம் அளித்து தங்கள் வேலையை காட்டிக்கொண்டுள்ளனர். அரசியல்வாதிகள் மற்றும் வாக்காளர்கள் மனம் மாறாத வரை என்னதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை என்பதே நிதர்சனம்.