வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நான்காவது நாளான இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் காளியம்மாள், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் வந்தனர். மதியம் சுமார் 12 மணி அளவில் வந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருடன் வருகை தந்தவர்களை 100 மீட்டருக்கு முன்பாக காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர்களின் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வந்தார். அவருடன் வந்தவர்களை காவல்துறையினர் 100 மீட்டருக்கு முன்பாக தடுத்து நிறுத்தவில்லை. வேட்புமனு தாக்கல் செய்யும் வளாகத்திற்குள் மட்டுமே வேட்பாளர் மற்றும் 4 பேர்கள் முதலில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அதற்கு பின்பு மேலும் சில அதிமுக நிர்வாகிகளை வேட்புமனு தாக்கல் செய்யும் வளாகத்திற்குள் காவல்துறையினர் அனுமதித்தனர். மேலும் கூட்ட நெரிசல் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஊர்ந்து சென்றன.
இதன் மூலம் வடசென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காவல்துறை துணையுடன் அதிமுக கூட்டணி கட்சியினர் மீறியுள்ள சம்பவம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.