சென்னை: 2024-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை ஏற்கனவே தேர்தல் ஆனையம் தொடங்கி, வரைவு வாக்காளர்களின் பட்டியலும் வெளியிடபட்டிருக்கிறது. புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணிக்கான முகாம்களும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், ஏற்கனவே மாநில வாரியாக அந்தந்த மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், இறந்தவர்களின் பெயர் நீக்கம், முதல் வாக்காளர்களின் பெயர் சேர்ப்பு, வாடகை வீடுகளில் இருப்போர் இன்னும் முகவரி மாற்றாமல் இருத்தல், இப்படி பொதுமக்கள் தரப்பிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும் மாநில தேர்தல் ஆணையம் பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் தலைமையில் நாளை (நவ.9) சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இதில் தமிழகத்தின் சார்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கலந்து கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலின் ஏற்பாடுகள், வாக்கு பெட்டிகள் தயார் நிலையில் வைத்திருத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள், மிகவும் பதட்டமான வாக்குச் சாவடிகள் எத்தனை உள்ளது, அந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குதல் மற்றும் வாக்கு மையங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகளை தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை ஜி.எஸ்.டி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: இந்து அறநிலையத்துறையின் கடைசி நாள்.. அண்ணாமலை ஆவேசம்!