கடந்த 10ஆம் தேதி முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் காலமானார். தற்போது அவரின் நினைவாக, இந்திய தேர்தல் ஆணையம் நிர்வகித்துவரும் ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை தொடர்பான சர்வதேச கல்வி நிலையத்தில், சேஷன் பெயரில் தனி இருக்கை ஒன்றை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. ஐந்தாண்டு காலத்திற்கான இந்த இருக்கைக்கு, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி தலைமை வகிக்கவுள்ளார்.
இந்தத் தகவலை இன்று அகமதாபாத்தில் ஒரு தனியார் கல்வி நிலைய பயிலரங்கம் ஒன்றில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அப்போது அவர், இந்திய தேர்தல் களத்தில் வெளிப்படைத்தன்மை, நேர்மை, தூய்மை ஆகியவற்றை உறுதிப்படுத்த, சேஷன் அரும்பணி ஆற்றியதாகவும் குறிப்பிட்டார்.
மறைந்த டி.என். சேஷன், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த 1990 - 1996 காலக்கட்டத்தில் திறம்பட செயல்பட்டு பல்வேறு தேர்தல் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய ஜனநாயகத் திருவிழாவின் சக்கரவர்த்தி டி.என். சேஷன்!