தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரம் அடைந்துவரும் நிலையில், வாக்காளர் பட்டியலை இறுதி செய்து வெளியிடுவதற்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ’சொந்த ஊர், உள்ளாட்சி பகுதிகளில் அல்லது சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அரசு மற்றும் காவல் அலுவலர்களை வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
ஒரே மாவட்டத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் அல்லது செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மூன்று வருடம் நிறைவு பெற்றாலும் அவரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். ஐஜி, டிஐஜி, எஸ்பி, இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் நிலையிலான காவல் அலுவலர்களும் மாற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமன அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், நோடல் அதிகாரிகள் மற்றும் இன்ன பிற தேர்தல் நடத்தும் பணியில் இருப்பவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. மேலும், கணினி வேலைகள், சிறப்பு பிரிவு அதிகாரிகள், பயிற்சி பிரிவில் இருக்கும் காவல் அதிகாரிகளுக்கும் இது பொருந்தாது.
இந்த இடமாற்ற பணிகளை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.