சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் கிரிகோரி தெருவைச் சேர்ந்தவர் ஜோதி (66). இவரது கணவர் தேவராஜ் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில், தனது மகன் சம்பத் (43), மருமகள் மற்றும் இரு பேரன்களோடு ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (அக்.27) 11 மணியளவில், ஜோதி உள்ளிட்ட குடும்பத்தினர், பணி முடிந்து வரும் மகன் சம்பத்திற்காக அவர்களது வீட்டு வாசலில் காத்திருந்துள்ளனர். அப்பொழுது அந்த தெரு வழியாக வந்த இளைஞர்களைப் பார்த்து சாலையில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் பலமாக குரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள், சாலையில் கிடந்த கற்களை எடுத்து நாய்களை விரட்டி அடிக்கத் தொடங்கி உள்ளனர்.
அவர்களின் அடியில் இருந்து தப்பிப்பதற்காக நாய்கள் நாலாபுறமும் சிதறி ஓடவே, இளைஞர்களும் விரட்டி விரட்டி அடிக்கத் தொடங்கி உள்ளனர். அவ்வாறு அடித்த கற்களில் ஒன்று, மூதாட்டி ஜோதி வீட்டினுள்ளே வந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜோதி ஏன் இவ்வாறு நாயை அடிக்கிறீர்கள்? அமைதியாக செல்லக் கூடாதா என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நான்கு இளைஞர்களும், தங்களது நண்பர்களுக்கு கால் செய்து அவர்களை வரவழைத்துள்ளனர்.
ஒரே நேரத்தில் விரைந்து வந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் ஜோதி வீட்டில் உள்ளே நுழைந்து ஜன்னல் கதவுகளை உடைத்ததோடு அவரையும், அவரது மகன், மருமகள் பேரப்பிள்ளைகளையும் சரமாரியாக தாக்கத் தொடங்கி உள்ளனர். ஜன்னல் கண்ணாடியை இளைஞர்கள், சம்பத்தின் முதுகு மற்றும் வயிற்றில் கீறியுள்ளனர். இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலை குலைந்த ஜோதி, படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதனிடையே மூதாட்டி ஜோதி உயிரிழந்தது தெரிந்ததும், தாக்குதலில் ஈடுபட்ட கும்பல், அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பம்மல் சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூதாட்டி ஜோதியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய இளைஞர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடும் சைக்கோ இளைஞர்.. பொதுமக்கள் அச்சம்!