சென்னை அரசு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை பாக்டீரியா தொற்று காரணமாக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தஸ்தகீர் - அஜிஸா தம்பதி. இவர்களுக்கு பிறந்த ஒன்றரை வயது குழந்தை, 1.5 கிலோ எடை மட்டுமே கொண்டதாக இருந்தது. அதனால் பல்வேறு பிரச்சினைகள் கடந்த ஓராண்டாக இருந்து வந்துள்ளது. தலையில் ரத்தகசிவு உள்ளிட்டப் பிரச்சனைகளுக்கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், குழந்தை தலையில் இருக்கும் நீரை வெளியேற்ற முடிவு செய்த மருத்துவர்கள் அதற்காக குழந்தையின் தலையிலிருந்து வயிற்றுக்கு ஒரு குழாய் பொருத்தப்பட்டது. இந்த குழாய் குழந்தையின் ஆசனவாய் வழியாக வெளியேறிவிட்டது. அச்சமடைந்த பெற்றோர் கடந்த ஜூன் 29-ம் தேதி மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அன்று இரவே அறுவை சிகிச்சை செய்து மீண்டும் குழாய் பொருத்தப்பட்டது. பின்னர் மருந்து கொடுப்பதற்கும், திரவ உணவு ஏற்றுவதற்கும் வசதியாக குழந்தையின் வலது கையில் ஊசி பொருத்தப்பட்டது. பிறகு அந்தக் கை கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி, கருஞ்சிவப்பு நிறத்துக்கு வந்தது.
இதையடுத்து, பெற்றோர் மீண்டும் மருத்துவர்களை அணுகினர். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில், ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வலது கையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர். ஆனால் பெற்றோர், மருத்துவர்களின் தவறான சிகிச்சையின் காரணமாகத்தான் குழந்தையின் கை அகற்றப்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிய உயர்மட்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு விசாரணைக் குழுவின் அறிக்கையில் சிகிச்சையில் எந்தவிதமான தவறும் இல்லை என்பதை மருத்துவத்துறை அறிவித்தது.
இந்த நிலையில் குழந்தை இன்று அதிகாலை 5.42 மணிக்கு இறந்து விட்டதாக சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், "ராமநாதபுரத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை, குறை பிரசவத்தில் 1.5 கிலோ எடையுடன் 32 வாரத்தில் பிறந்தது. அந்த குழந்தைக்கு தீவிர hydrocephalus எனும் மூளையில் நீர் கசியும் கோளாறு இருந்தது.
அதற்காக ஐந்து மாதத்தில் நீர் கசிவை உறிஞ்சி எடுக்க VP shunt எனும் சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும், குழந்தை தீவிர ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்திறன் குறைபாடும் கொண்டிருந்தது. நீர் கசிவை உறிஞ்சுவதற்காக பொருத்தப்பட்ட VP shunt ஆசன வாய் வழியாக வெளியேறியது , குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து பாதித்தது. மேலும் விட்டமின் டி குறைபாடு , ஹைப்போதைராய்டிசம் உள்ளிட்ட பாதிப்பின் காரணமாக குழந்தை இறந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் கூறுகையில், “பாக்டீரியா நோய் தொற்றினால் ரத்தத்தில் நச்சுக்கள் கலந்து அந்த நச்சுத்தன்மையால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு, வைட்டமின் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் குழந்தை உயிரிழந்துள்ளது" என தொிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு!