சென்னை: கரோனா காலகட்டத்தில் அனைவரும் தேர்ச்சி என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வுக்கு (JEE Mains Exam) விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் மதிப்பெண்களை பதிய வேண்டியிருப்பதால் மாணவர்கள் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இதுகுறித்து ஐஐடி இயக்குநர் காமகோடியிடம் கேட்டபோது, தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் ஜேஇஇ தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்வதில் உள்ள சிரமம் குறித்து ஜேஇஇ தேர்விற்கான தலைவரிடம் பேசுவதாகத் தெரிவித்தார்.
உலகையே உலுக்கிய கரோனா பெருந்தாெற்றால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-20ஆம் கல்வியாண்டில் 2020 மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. எனவே, அந்த கல்வியாண்டில் நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. கரோனா தொற்றின் தீவிரம் காரணமாக 2020-21ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறவில்லை.
இதனால், மார்ச் 2021-ல், (2020-2021ஆம் கல்வியாண்டு) பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வு நடைபெறவில்லை. எனவே மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது மதிப்பெண் பட்டியலில் மதிப்பெண்களை குறிப்பிடாமல் வெறுமனே,
தமிழ் "தேர்ச்சி"
ஆங்கிலம் "தேர்ச்சி"
கணிதம் "தேர்ச்சி"
அறிவியல் தேர்ச்சி
சமூக அறிவியல் "தேர்ச்சி" என மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டம் உள்ளிட்ட பிறப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு தேர்வுகள் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. 2020-2021ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் தற்போது 2022-2023ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
இவர்கள் தற்போது JEE மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, ஆன்லைன் விண்ணப்பத்தில் இவர்கள் பத்தாம் வகுப்பில் எடுத்த மொத்த மதிப்பெண்களைப் பதிவு செய்யுமாறு கேட்கிறது. இதனால், தமிழ்நாட்டில் 2020-2021ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வினை எழுதுவதற்கு 2023 ஜனவரி 12ஆம் தேதி வரையில் https://jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும். இவர்களுக்கான தேர்வுகள் ஜனவரி 24,25,27,28,29,30,31 ஆகியத் தேதிகளில் 13 மொழிகளில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் ஜேஇஇ மெயின் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளதால், மத்திய, மாநில அரசுகள் இது சார்ந்து மாணவர்களுக்கு உரிய தீர்வு அளிக்க வேண்டும் என கல்வியாளர் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது