தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பாக பள்ளி மாணவர்கள் வெளிநாட்டிற்கு கல்விச் சுற்றுலா செல்லும் திட்டத்தில் 25 மாணவர்கள் சிங்கப்பூர், மலேசியாவிற்கு கல்விச் சுற்றுலா சென்று சென்னை திரும்பினர்.
மாணவர்களை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், மலேசியாவின் முன்னாள் கல்வித் துறை துணை அமைச்சர் கமலநாதன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் வாழ்த்தி வரவேற்றனர்.
இதனையடுத்து கல்விச் சுற்றுலா பற்றிய தங்கள் அனுபவத்தை மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
மலேசிய தமிழ் மாணவர்கள் தமிழில் நம்மை விடச் சிறந்தவர்களாக உள்ளனர். தமிழ் பள்ளிகளில் தமிழ் புலவர்களின் படங்களை பெரிய அளவில் பார்க்கலாம். இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பெருமையாகும்.
தமிழ்நாட்டை விட மலேசியாவில் எங்குப் பார்த்தாலும் பசுமையாக இருந்தது. அதேபோல் நாமும் அதிகளவில் மரங்களை வளர்த்து பசுமையை காக்க வேண்டும். அங்கு தூய்மையை அனைவரும் கடைப்பிடிக்கின்றனர். அதேபோல் நாமும் இருக்க வேண்டும். தமிழ் மொழியையும் தமிழ் பாரம்பரியத்தையும் நன்கு பேணி காக்கிறார்கள்.
மலேசியாவில் உள்ள ஒரு தமிழ் பள்ளியில் அப்துல் கலாம், சீனிவாச ராமானுஜம் போன்ற பெயர்கள் வைக்கப்பட்டிருந்தது. மலேசியாவில் தமிழுடன் ஆங்கிலம் கலக்காமல் பேசுவது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமையாக இருந்தது.
மேலும் மலேசிய நாடாளுமன்ற சபாநாயகருடன் கலந்துரையாடும் மிகப்பெரும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் அவருடன் சமமாக அமர்ந்து பேசினோம். அவர் எங்களுக்கு பரிசு அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் நாம் அமர்ந்து பேச முடியாது என மாணவர்கள் தெரிவித்தனர்.