சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது. அதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை 4 லட்சத்து 10 ஆயிரத்து 308 மாணவர்களும், 4 லட்சத்து 41 ஆயிரத்து 173 மாணவிகளும், ஒரு திருநங்கை என 8 லட்சத்து 51 ஆயிரத்து 482 பேர் எழுத உள்ளனர்.
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 3 லட்சத்து 67 ஆயிரத்து 535 மாணவர்களும், 4 லட்சத்து 20 ஆயிரத்து 242 மாணவிகளும், 6 திருநங்கை என 7 லட்சத்து 87 ஆயிரத்து 783 பேர் மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரையில் எழுத உள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை ஏப்ரல் 6 ந் தேதி முதல் 20 ந் தேதி வரையில் 4 லட்சத்து 74ஆயிரத்து 543 மாணவர்களும், 4 லட்சத்து 63 ஆயிரத்து 522 மாணவிகளும், 2 திருநங்கை என 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 பேர் எழுத உள்ளனர்.
11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையிலான நாட்களில் நடத்தி முடிக்க அரசுத் தேர்வுத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத்தேர்வினை மார்ச் 20 முதல் 24ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பொதுத்தேர்வினை எழுதும் மாணவர்கள் எந்தவிதமான அச்சமும், பயமுமின்றி தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் கல்வி உளவியலாளர் சரண்யா ஜெயக்குமார் கூறும் ஆலோசனைகளில், பொதுத்தேர்வுக்கு ஒரு மாதம் முன்னர் நாட்கள் கோல்டன் டேய்ஸ் என கூறுகிறோம். முக்கியமான இந்த நாட்களில் படித்தவற்றை மீண்டும் நினைவு கூர்வதற்கான நேரம். எதையும் படிக்காவிட்டால், நீங்கள் படிக்கலாம். இந்த நேரம் படித்தவற்றை மீண்டும் நினைவு கூர்வதற்கான காலம் என்பதை உணர வேண்டும்.
மாணவர்கள் உடல் மற்றும் மன நலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நன்றாக சாப்பிட்டு விட்டு 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் . மேலும் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். எந்த டென்ஷனையும் பெரியதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த காலத்தில் நாம் எந்த அளவிற்கு படிக்கிறோமோ அதற்கு ஏற்பத்தான் மதிப்பெண்கள் இருக்கும். அதனையும் மீறி மதிப்பெண்கள் குறைந்தால் அது குறித்து கவலைப்படத்தேவையில்லை. தேர்வு முடியும் வரையில் மாணவர்கள் வெளியில் செல்வதை தவிர்த்து, வீட்டில் இருந்து படித்தவற்றை மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ளலாம்.
அதிகளவில் டென்ஷன் செய்வது போல் நெகட்டிவ்வாக பேசினால் அவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். குடும்பம், அப்பா, அம்மா , சொந்தக்காரர்கள், நண்பர்களின் பிரச்சனையை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது. அதனை சரி செய்வதற்கான நேரம் இது கிடையாது. தேர்வில் மதிப்பெண்கள் எவ்வளவு வாங்கினாலும் உயர்கல்வி காத்திருக்கிறது. இந்தியாவில் எவ்வளவோ பாடப்பிரிவுகள் இருக்கிறது. எனவே மதிப்பெண்களை குறிவைத்து படிக்காதீர்கள். கடினமாக படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்றால் பரவாயில்லை. ஏதாவது ஒரு காரணத்தினால் மதிப்பெண்கள் குறைந்து தேர்வில் தோல்வி அடைந்தாலும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் அதிகளவில் மதிப்பெண்ணிற்கு முக்கியத்துவம் அளிப்பது கிடையாது. தேர்வு முடிந்த உடன் மாணவர்கள் சென்று தாங்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவை கூறி, அட்மிஷன் போட்டு வைத்து விட்டாலே சீட் கிடைக்கும். நிறைய பேர் தேர்வு முடிவுகள் வந்தப் பின்னர் உயர்கல்வியில் சேர்வதற்கான இடத்தை தேடும் போது தான் பதற்றம் அதிகரிக்கும்.
20 ஆண்டிற்கு முன்னர் உயர்கல்வியில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமாக கருதப்பட்டது. தற்பொழுது நீட் போன்ற 72 போட்டித் தேர்வுகள் இருக்கிறது. நுழைவுத்தேர்வுகள் மூலம் சேரும் போது 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை பார்ப்பது இல்லை. ஆனால் அண்ணா பல்கலைக் கழகம் போன்றவற்றில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே நல்ல மதிப்பெண் பெற்றால் நல்ல கல்லூரிக் கிடைக்கும். அப்படி இல்லாமல் குறைவான மதிப்பெண்கள் பெற்றாலும் ஏதாவது ஒரு கல்லூரிக் கிடைக்கும். படிக்கும் மாணவர்கள் எங்கிருந்தாலும் படிப்பார்கள்.
பெற்றோர்கள் மாணவர்களை படி நேரத்தை வீணடிக்காதே என கூறுகின்றனர். மாணவர்கள் டிவி, செல்போன் போன்றவற்றில் நேரத்தை வீணாக்கும் போது பெற்றோர்கள் கூறத்தான் செய்வார்கள். இது போன்ற டிவைஸ் உங்களை தாெந்தரவு செய்யும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இதனால் படித்தவைகள் ஞாபகத்தில் இருக்காது. எனவே நினைவாற்றல் அதிகரிக்க டிவைஸ் பயன்பாட்டை 2 மாதத்திற்கு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். டிவி உள்ளிட்ட கெஜெட்டுகளின் பயன்பாடுகள் ஒரு மணி நேரத்திற்குள் தான் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேர மேலாண்மை முக்கியமானது. இதற்காக மாணவர்கள் அதிகளவில் தேர்வுகளை எழுதும் போது , தேர்வினை வேகமாக எழுவதற்கான பயிற்சி அதிகரித்து, குறிப்பிட்ட நேரத்தில் தேர்வினை எழுத முடியும் என தெரிவித்தார். பொதுத் தேர்வினை மாணவர்கள் எழுதுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ள தேர்வுத்துறை, கண்காணிப்பு அலுவலர்களும் எவ்வாறு மாணவர்களை அச்சமின்றி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.